விவசாய விளைபொருட்களுக்கு கூடுதல் விலை கேட்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாயிகள் தர்ணா
விவசாய விளைபொருட்களுக்கு கூடுதல் விலை கேட்டு விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
கம்பு வரத்து அதிகரிப்பு
சிறுதானிய பயிர்களில் மிகவும் முக்கியமான சத்து மிகுந்த பயிராக உள்ள கம்பு, தற்போது விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. நேற்று முன்தினம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கம்பு வரத்து அதிகரித்த நிலையில் 100 கிலோ எடை கொண்ட நாட்டு கம்பு மூட்டை ஒன்று அதிகபட்சம் ரூ.7,355-க்கும், குறைந்தபட்சம் ரூ.7,200-க்கும் விலைபோனது. அதுபோல் எச்.பி. ரக கம்பு 100 கிலோ எடை கொண்டது மூட்டை ஒன்று ரூ.2,389-க்கு விலைபோனது.
கடந்த வாரம் நாட்டு கம்பு விலை ரூ.5,800-க்கு விற்பனையான நிலையில் படிப்படியாக உயர்ந்து நேற்று முன்தினம் ரூ.7,400 வரை விற்பனை செய்யப்பட்டதால் கம்பு பயிரிட்ட விவசாயிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைத்தது.
குறைந்த விலை நிர்ணயம்
இந்நிலையில் நேற்றும் விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், கம்பு பயிரை விற்பனைக்காக கொண்டு வந்தனர். 300-க்கும் மேற்பட்ட மூட்டைகள் வரத்து இருந்தது. இவை எடை போடப்பட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
அப்போது 100 கிலோ எடை கொண்ட மூட்டை ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ.6,800-ம், குறைந்தபட்சம் ரூ.6,399 ஆகவும் விலை நிர்ணயம் செய்தனர். இது நேற்று முன்தினத்தின் விலையை விட குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டதால் விவசாயிகள் மிகவும் கவலையடைந்தனர். இதுபற்றி ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகளிடம் விவசாயிகள் முறையிட்டற்கு, வரத்து அதிகமாக உள்ளதால் இவ்வாறுதான் விலை நிர்ணயம் செய்ய முடியும் என்றும், மற்ற ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை காட்டிலும் விழுப்புரத்தில் அதிக விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என்றும் கூறியதாக தெரிகிறது.
சாலை மறியல்
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு நேற்று பகல் 12.20 மணியளவில் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விளைபொருட்களுக்கு கூடுதல் விலை நிர்ணயம் செய்யக்கோரி அவர்கள் கோஷம் எழுப்பினர். இதன் காரணமாக விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் மேற்கு போலீசார் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச்செய்தனர்.
தர்ணா போராட்டம்
அதன் பிறகு விவசாயிகள் அனைவரும், ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கம்பு உள்ளிட்ட விளைபொருட்கள் அனைத்திற்கும் கூடுதல் விலை கேட்டு அவர்கள் கோஷம் எழுப்பினர்.
பின்னர் அவர்களிடம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கம்பு மூட்டை ஒன்றுக்கு நேற்று முன்தினத்தைபோல் ரூ.7,300 வரை விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், மேலும் இனிவரும் நாட்களிலும் கம்பு வரத்து அதிகரிக்கக்கூடும் என்பதால் அதை காரணம் காட்டி விலையை குறைக்கக்கூடாது, கூடுதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் முறையிட்டனர். இதை கேட்டறிந்த அதிகாரிகள், அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன்பேரில் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.