வாயில் கருப்பு துணி கட்டி விவசாயிகள் தர்ணா

ஆப்பனூர் தொடக்க வேளா ண்மை கூட்டுறவு சங்கத்தில் வாயில் கருப்பு துணி கட்டி விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

Update: 2023-02-08 18:45 GMT

சாயல்குடி, 

ஆப்பனூர் தொடக்க வேளா ண்மை கூட்டுறவு சங்கத்தில் வாயில் கருப்பு துணி கட்டி விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

கடன் மேளா

கடலாடி அருகே ஆப்பனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் மேளா நடைபெற்றது. கூட்டுறவு சார் பதிவாளர் விஜயராமலிங்கம் தலைமை தாங்கினார். முதுகுளத்தூர் சரக மேற்பார்வையாளர் மைக்கேல் சேவியர் முன்னிலை வகித்தார். செயலாளர் செந்தில் பாண்டி வரவேற்றார். சங்க பணியாளர்கள் ஆனந்த வடிவேல், செந்தூர்பாண்டி, கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கடன் மேளாவை ஒருங்கிணைத்தனர். இந்த சங்கம் மூலம் பயிர்கடன் ரூ.3.39 கோடியும், கால்நடை பராமரிப்பு கடன் ரூ.2.68 கோடியும், நகைக்கடன் ரூ.10.45 கோடியும் இந்த ஆண்டில் விவசாயிகளுக்கு கடனாக வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் ரூ.84.84 லட்சத்திற்கான பயிர் கடன் 254 நபர்களுக்கும், ரூ.80.37 லட்சத்திற்கான நகை கடன் 249 நபர்களுக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 31 சுய உதவி குழுக்களுக்கு கணக்குகள் திறக்கப்பட்டு அதில் 13 குழுக்கள் வரவு-செலவுகள் நடைபெற்று வருகிறது. சென்ற மாதத்திலிருந்து தற்போதுவரை 18 சுய உதவி குழுக்களுக்கு புதிதாக சேமிப்பு கணக்குகள் திறக்கப்பட்டு கடன் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

தர்ணா

இந்த சிறப்பு கடன் மேளா மூலம் ஏக்கர் ஒன்றுக்கு பயிர் கடனாக பருத்திக்கு ரூ.22050, மிளகாய்க்கு ரூ.27,950 வழங்கப்படும் என்றும், கடன்களுக்கு ஒரு வருடத்திற்கு வட்டி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் நிலக்கடலை ஏக்கருக்கு ரூ.21 ஆயிரத்து 700, மக்காச்சோளம் ரூ.18,850, பயிர் வகைகள் ரூ.17980, குதிரைவாலி ரூ.7200, சோளம் ரூ.9350, தென்னை பராமரிப்பிற்கு ரூ.22,000 வீதம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் விவசாயிகளுக்கு எந்த ஒரு அடமானமும் இல்லாமல் கடன் வழங்க வேண்டும் எனக்கூறி பா.ஜ.க. கடலாடி வடக்கு ஒன்றிய தலைவர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் வெற்றி மாலை ஆகியோர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு எடுத்து செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு சார் பதிவாளர் விஜயராமலிங்கம் தெரிவித்ததின்பேரில் விவசாயிகள் கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்