விவசாயிகளின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம்
விவசாயிகளின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது என வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
பட்டுக்கோட்டைூ
விவசாயிகளின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது என வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ச.மாலதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆவணங்கள்
தமிழக அரசின் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களில் விவசாயிகள் இணைந்து பயன்பெறும் வகையில் வேளாண்மை உழவர் நலத்துறையினால் வேளாண் அடுக்கு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் ஒற்றைச் சாளர முறையில் அனைத்து துறை சார்ந்த திட்டங்களுக்கும் ஒரே இடத்தில் பதிவு செய்து அரசின் திட்ட பலன்களை பெற்றுக் கொள்ளும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு முறையும் விவசாயிகள் விண்ணப்பிக்கும் பொழுது தனித்தனியாக ஆவணங்களை சமர்ப்பிக்க தேவை இன்றி எளிதில் திட்டப் பயன்களை பெற இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.
கிராம நிர்வாக அலுவலர்களிடம்...
இவ்வாறு பதிவேற்றம் செய்யும்பொழுது நில விவரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயிகளின் விவரங்கள் இணையதளத்தில் சேகரிக்கப்பட்டு பயன்படுத்தப்படும். இந்த இணையதளத்தில் விவசாயிகள் தங்களது விவரங்களை இணைக்க ஆதார் நகல், விவசாயின் புகைப்படம், வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் நில உரிமை ஆவணங்களின் நகல்கள் அவசியம். சின்ன ஆவுடையார் கோவில், மகிழங்கோட்டை, நரசிங்கபுரம், பழஞ்சூர், தொக்காலிக்காடு, கைலாசநாதபுரம், நாடியம்பாள்புரம், நைனாங்குளம், பாப்பாவெளிபாளையங்கோட்டை, பட்டுக்கோட்டை, ரெங்கோஜியப்பாதோட்டம், துவரங்குறிச்சி வடக்கு தெற்கு, கழுகபுலிக்காடு, கொண்டிக்குளம், பில்லங்குழி, பரக்கலக்கோட்டை, சுந்தரம், சவுந்தரநாயகிபுரம், தாமரங்கோட்டை வடக்கு, ஏனாதி, சுக்கிரன்பட்டி, வீரக்குறிச்சி, வேப்பங்காடு உக்கடை, எட்டுபுளிக்காடு, நாட்டுசாலை, செம்பாளூர், வெண்டாகோட்டை ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் வருவாய்த்துறையில் கிராம நிர்வாக அலுவலர்களிடம் தங்கள் ஆவணங்களை அளித்து விவரங்களை இணைத்து கொள்ளலாம்.
வேளாண்மை அலுவலர்கள்
முதல்சேரி, பள்ளிகொண்டான், பைங்காட்டுவயல், பொன்னவராயன்கோட்டை, பொன்னவராயன் கோட்டை உக்கடை, நம்பிவயல், கரம்பயம், வேப்பங்காடு, பண்ணவயல், கூத்தாடிவயல், நடுவிக்கோட்டை, செண்டாங்காடு பிட் 1,2, திட்டக்குடி, கிருஷ்ணாபுரம், புதுக்கோட்டகம், தம்பிக்கோட்டை மேலக்காடு, அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, புதுக்கோட்டை உள்ளூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் உதவி வேளாண்மை அலுவலர்களிடமும், ராஜாமடம், சேண்டா கோட்டை, அணைக்காடு, மகாராஜாசமுத்திரம், கார்காவயல், துவரமடை, தம்பிக்கோட்டை வடகாடு, தாமரங்கோட்டை தெற்கு, பாளமுத்தி, சாந்தாங்காடு, ஆத்திகோட்டை, சூரப்பள்ளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தோட்டக்கலை துறையில் உதவி தோட்டக்கலை அலுவலர்களிடமும் ஆவணங்களை அளித்து தங்கள் விவரங்களை இணைத்துக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.