சங்கு ஊதி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கள்ளிமந்தையம் அருகே சிப்காட் அமைக்க கூடாது என்று சங்கு ஊதி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளிமந்தையம் பகுதியில் சிப்காட் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிடவேண்டும். மின்வாரியம் சார்பில் உயர் மின்கோபுரம் அமைக்க நிலம் எடுத்ததிற்கு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் சார்பில் தும்பிச்சிபாளையத்தில் தொடர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று சங்கு ஊதி, மணி அடித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வடிவேல் தலைமை தாங்கி பேசினார். திருப்பூர் மாவட்ட அமைப்பு செயலாளர் பாலு முன்னிலை வகித்தார். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில துணைச் செயலாளர் நேதாஜி கலந்துகொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.
இதேபோல் கள்ளிமந்தையம் அருகே உள்ள வல்லக்குண்டாபுரத்தில் சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதற்கு ஒருங்கிணைப்பாளர்கள் பழ.ரகுபதி தலைமை தாங்கினார். பொறுப்பாளர்கள் காளிமுத்து, அன்பரசு மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கள்ளிமந்தையம் பகுதியில் சிப்காட் அமைத்தால் சுற்றுச்சூழல், மண்வளம் போன்றவை பாதிக்கப்படும் என்றும் இப்பகுதியில் சுமார் 30ஆயிரம் ஏக்கர் நிலப்பகுதி விவசாயத்திற்கு பயன்படாத நிலை ஏற்படும். எனவே சிப்காட் இப்பகுதியில் அமைக்க கூடாது, இதுதொடர்பாக துண்டுபிரசுரம் மற்றும் கையெழுத்து இயக்கம் நடத்துவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.