வல்லநாடு பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை

வல்லநாடு பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-08-11 11:42 GMT

வல்லநாடு பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

குறைதீர்க்கும் நாள்

தூத்துக்குடி கோட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தூத்துக்குடி தெற்கு பீச் ரோட்டில் உள்ள வ.உ.சி. துறைமுக சமுதாய நலக்கூடத்தில் நேற்று காலை நடந்தது. கூட்டத்துக்கு தூத்துக்குடி உதவி கலெக்டர் மா.சிவசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி தாசில்தார் செல்வக்குமார், ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி வடிநில உட்கோட்ட அலுவலர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர். அப்போது, மாவட்டத்தில் 3 இடங்களில் ஒரே நேரத்தில் விவசாயிகள் கூட்டம் நடத்தப்படுவதால் உயர் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது. இது எங்கள் கோரிக்கைகளை காலம் தாழ்த்தும் செயலாக உள்ளது. ஆகையால் ஒவ்வொரு கோட்டத்திலும் வெவ்வேறு நாட்களில் கூட்டம் நடத்த வேண்டும். அதில் உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெல் கொள்முதல் நிலையம்

உப்பாற்று ஓடை சீரமைப்பு பணிகளுக்கு ரூ.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அந்த பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும். மருதூர் கீழக்கால் 9-ம் எண் மடையில் இருந்து வரும் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதனை அகற்ற மடையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வல்லநாட்டில் அறுவடை நடந்து வருகிறது. தற்போது அந்த பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். காலதாமதம் செய்வதால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். வல்லநாடு பகுதியில் மல்லிகைப்பூ சாகுபடி செய்துள்ளோம். அதனை விற்பனைக்கு கொண்டு செல்ல போதுமான பஸ் வசதி இல்லை. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

நடவடிக்கை

இதற்கு பதில் அளித்து உதவி கலெக்டர் சிவசுப்பிரமணியன் பேசும் போது, கோட்ட அளவில் கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த கூட்டங்களில் அனைத்து விவசாயிகளுக்கும் பேசுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். அதே போன்று கோட்ட அளவில் தீர்வு காணக்கூடிய பிரச்சினைகளுக்கு எளிதில் தீர்வு காணலாம். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. ஆகையால் மருதூர் கீழக்கால் 9-ம் எண் மடை பகுதியில் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகள் இருந்தால் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். வல்லநாடு பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் விரைவில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்