ஓட்டப்பிடாரம் தாலுகாவை வறட்சி பகுதியாக அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் தாலுகாவை வறட்சி பகுதியாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும் என்று நேற்று நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-02-09 18:45 GMT

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் தாலுகாவை வறட்சி பகுதியாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும் என்று நேற்று நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவில்பட்டி கோட்டத்துக்கு உட்பட்ட விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் ஓட்டப்பிடாரத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி தலைமை தாங்கினார். தாசில்தார் நிஷாந்தினி, சமூகப் பாதுகாப்பு திட்ட தாசில்தார் செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில்,

ஓட்டப்பிடாரம் தாலுகா மற்றும் பசுவந்தனை குறுவட்டம் பகுதியில் வடகிழக்கு பருவமழை மிகவும் குறைவாக கிடைத்துள்ளது. இதனால் விவசாயத்தில் மகசூல் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வறட்சிபகுதியாக...

எனவே, ஓட்டப்பிடாரம் தாலுகாவை வறட்சி பகுதியாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், உளுந்து, பாசி உள்ளிட்ட பயிர்களுக்கு காப்பீடு தொகையை முழுமையாக வழங்க வேண்டும்.

காற்றாலை, சோலார் பேனல் நிறுவனத்தினர் தண்ணீர் வரத்து ஓடைகளை அடைத்து சாலை அமைப்பதால், நீர்நிலைகள் நிரம்புவதில்லை. விவசாயிகளும் தங்களது நிலங்களுக்கு செல்வதில் இடையூறு ஏற்படுகிறது. இதுகுறித்து போலீஸ்நிலையத்தில் புகார் தெரிவிக்கும் விவசாயிகள் மீதுதான் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இப்பகுதி விவசாய நிலங்களில் தொழில் தொடங்கும் தனியார் காற்றாலை, சோலார் பேனல் நிறுவனத்தினர் உள்ளூரில் படித்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சீரான மின்சாரம் தேவை

கிஷான் அட்டைக்கு 3 முறைக்கு மேல் விண்ணப்பித்தும் இதுவரை எங்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால் மானிய விலையில் விதை, உரங்கள் வாங்க முடியவில்லை. இந்த அட்டை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தாலுகாவிலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் சீராக 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

உதவி கலெக்டர்

இதற்கு பதிலளித்து உதவி கலெக்டர் மகாலட்சுமி பேசுகையில், கலெக்டரிடம் அனுமதி பெற்று அடுத்த வாரம் காற்றாலை, சோலார் பேனல் நிறுவனத்தினர், அதிகாரிகள், விவசாயிகள் ஆகியோர் பங்கேற்கும் முத்தரப்பு ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். அப்போது நீரோடைகள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். சான்றுகள் கேட்டு விண்ணப்பிக்கும் போது ஏற்படும் தாமதம் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். கவர்னகிரியில் உள்ள குடிநீரை ஆய்வு செய்து குறித்து மாவட்ட கலெக்டரின் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து பகுதிகளுக்கும் மும்முனை மின்சாரம் வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

கலந்து கொண்டவர்கள்

இக்கூட்டத்தில் மின்சார வாரிய உதவி செயற் பொறியாளர் சித்திவிநாயகமூர்த்தி, மண்டல துணை தாசில்தார்கள் இசக்கி முருகேஸ்வரி, சுபா, அப்பனராஜ், வட்ட வழங்கல் அலுவலர் கருப்பசாமி, உதவி கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளர் ராமகிருஷ்ணன், உதவி வேளாண்மை அலுவலர்கள் சுரேஷ், கல்பனா தேவி, சிவகாமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உதவி மேலாளர் ராம்ராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்