தோல் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை

பேரணாம்பட்டு ஏரியில் தோல் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

Update: 2022-06-24 12:37 GMT

பேரணாம்பட்டு ஏரியில் தோல் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

குறைதீர்வு கூட்டம்

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, வேளாண் இணை இயக்குனர் மகேந்திர பிரதாப் தீட்சித் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விவசாயிகள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அதற்கு கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பதில் அளித்தனர்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

தோல் தொழிற்சாலை கழிவு நீர்

பேரணாம்பட்டு பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலைகளில் வெளிவரும் கழிவு நீர் பேரணாம்பட்டு ஏரி மற்றும் மலட்டாற்றில் கலக்கிறது. இதனால் விவசாய நிலம், குடிநீர், காற்று மாசுபடுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தோல் பதப்படுத்த வேண்டும் என்றால் குறைந்தது ஒரு மாதம் ஆகும். ஆனால் தற்போது பல்வேறு ரசாயனங்களை பயன்படுத்தி ஒரே நாளில் தோல் பதப்படுத்துகின்றனர். இதை தடுக்க வேண்டும். இதற்கு மாற்றாக இயற்கை முறையில் தோல் பதப்படுத்த வேண்டும்.

மழை பெய்துள்ளதால் ஆற்றில் மணல் உள்ளது. இதனை பலர் கொள்ளை அடிக்கின்றனர். மணல் கொள்ளையை தடுக்க எம்-சாண்ட் மணல் விற்பனையை ஊக்குவிக்க வேண்டும்.

மணல் கொள்ளை 

மாட்டுவண்டி தொழிலாளர்கள் பலர் தங்களது குலத்தொழில் மாட்டு வண்டி ஓட்டுதல் என்று கூறுகின்றனர். மாட்டுவண்டி தொழிலாளர்கள் என்ற குலத்தொழில் கிடையாது. விவசாயிகள் அனைவரும் மாட்டுவண்டிகளை வைத்துள்ளனர். மணல் கொள்ளைக்காகவே சிலர் மாட்டு வண்டிகளை வாங்கி பயன்படுத்துகின்றனர்.

கிராமப்புறங்களில் கால்நடை வளர்ப்போர் தங்களது கால்நடைகளை பிறரின் விவசாய நிலங்களில் மேய்ச்சலுக்கு விடுகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. இழப்பீடு யாரிடம் கேட்பது என்பது தெரியவில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வேளாண் எந்திரங்கள் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் வேளாண் பொருட்களை வாங்குவதில் சிரமம் உள்ளது. எனவே வேளாண் எந்திரங்கள் 90 சதவீதம் மானியத்தில் வழங்க வேண்டும். ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆக்கிரமிப்பு

மோர்தானா அணையின் இடது கால்வாயினை திறக்க வேண்டும். பள்ளத்தூர் ஏரியினை ஆழப்படுத்த வேண்டும். செஞ்சி ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். செட்டிகுப்பம் ஓட்டேரியை மோர்தானா இடதுகால்வாயுடன் தற்காலிகமாக இணைத்து உள்ளதை நிரந்தரமாக இணைத்திட வேண்டும்.

காட்டெருமைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தி உள்ளது. இதற்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும். செஞ்சி மற்றும் ஊசூர் பகுதிகளில் துணை மின்நிலையம் அமைக்க வேண்டும். ஒடுகத்தூர்- மேல்அரசம்பட்டு மற்றும் குடியாத்தம்-பேரணாம்பட்டு வரையில் நகர பஸ்கள் இயக்கிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

2 ஏக்கர் நிலம்

இதற்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பதிலளித்து கூறியதாவது:-

விவசாய நிலங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவது தொடர்பாக ஏற்கனவே ஆலோசிக்கப்பட்டு உள்ளது. கிராமப்பகுதிகளில் கால்நடை வளர்ப்பவர்கள் மற்றும் கால்நடைகள் குறித்து கணக்கெடுக்க கால்நடை துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கணக்கெடுப்புக்கு பின்னர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கால்நடை வளர்ப்போருக்கு தீவனம் வழங்குதல் போன்றவை வழங்கப்பட்டு தடுக்கப்படும்.

தோல் தொழிற்சாலைகள் நிர்வாகத்திற்கு சமூக பங்களிப்பாக பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொழிற்சாலைக்கும் சுமார் 2 ஏக்கர் விவசாய நிலம் ஒதுக்கீடு செய்யப்படும். அதில் விவசாயம் பார்ப்பதற்கு அவர்கள் தொழிற்சாலையில் சுத்திகரிக்கப்பட்ட நீரை பயன்படுத்தப்பட வேண்டும். இதுதொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சில கோரிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்