அனுமதியின்றி வீடுகள் கட்டுவதாக பிரபல நடிகர்கள் மீது விவசாயிகள் புகார்
கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில், அனுமதியின்றி வீடுகள் கட்டுவதாக 2 பிரபல நடிகர்கள் மீது குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
கொடைக்கானல் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதற்கு ஆர்.டி.ஓ. ராஜா தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
அதில் விவசாய நிலங்களில் வனவிலங்குகள் புகுவதை தடுக்க வேண்டும். காட்டெருமை, காட்டுயானைகள் மற்றும் காட்டுப் பன்றிகளால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
விவசாயிகள் விளைவிக்கும் காய்கறிகளை வனத்துறை கொள்முதல் செய்து, வனப்பகுதியில் உணவாக கொட்டினால் வனவிலங்குகள் தோட்டங்களுக்குள் வராது. இதனை அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.
பிரபல நடிகர்கள் மீது புகார்
மேலும் பேத்துப்பாறை பகுதியில் பிரபல நடிகர்கள் 2 பேர் எந்தவித அனுமதியும் இன்றி வீடுகளை கட்டி வருகின்றனர். அவர்கள் அந்த பகுதியில் உள்ள சாலையை மறித்து உள்ளதால் பொதுமக்கள், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
கடந்த 25 நாட்களாக அப்பகுதியில் பொக்லைன் எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை தடுக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேல்மலை பகுதியில் உள்ள பல்வேறு நீர்வீழ்ச்சிகளுக்கு செல்வதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தனியார் மூலம் கட்டணம் வசூல் செய்கின்றனர் என்று விவசாயிகள் புகார் கூறினர்.
விசாரணை நடத்தி நடவடிக்கை
இதற்கு பதில் அளித்து அதிகாரிகள் பேசுகையில், காட்டு விலங்குகளால் பாதிக்கப்படும் விவசாயிகள் உரிய முறையில் மனு அளித்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும். காட்டுப் பன்றிகளை சுட்டுக் கொல்வதற்கு அரசு அனுமதி இல்லை.
இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்படும். மேல்மலை பகுதிகளில் உள்ள பல்வேறு அருவிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளிடம் தனியார் கட்டணம் வசூலிப்பது குறித்து அந்தந்த இடங்களில் அறிவிப்பு பலகைகள் அரசு மூலம் வைக்கப்பட உள்ளது. அத்துடன் காவல்துறை மூலமும் நடவடிக்கை எடுக்கப்படும். பேத்துப்பாறை பகுதியில் சினிமா நடிகர்கள் வீடுகள் கட்டுவது குறித்து உடனடி விசாரணை நடத்தப்படும் என்றனர்.
அப்சர்வேட்டரி சாலை சேதம்
கூட்டத்தில் நகராட்சி தலைவர் செல்லத்துரை பேசுகையில், அப்சர்வேட்டரி சாலை மிகவும் சேதமடைந்து இருப்பதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.. குறுகலான சாலையில் உள்ள தடுப்புகளை அகற்ற வேண்டும் என்றார்.
கூட்டத்தில் உதவி வனபாதுகாவலர் சக்திவேல், தாசில்தார் சரவணன், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முருகேசன், நகராட்சி துணைத் தலைவர் மாயக்கண்ணன், கவுன்சிலர்கள் கலாவதி தங்கராஜ், ஆண்டவர் அப்பாஸ், நகராட்சி மேலாளர் மீனா, வனச்சரகர் சிவக்குமார், போக்குவரத்து கழக கிளை மேலாளர் ராதாகிருஷ்ணன், தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் சைனி, பேத்துப்பாறை கிராமத் தலைவர் மகேந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதனை அடுத்து ஆர்.டி.ஓ. ராஜா, நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ராஜன், நகராட்சி தலைவர், துணைத்தலைவர் மற்றும் அதிகாரிகள் அப்சர்வேட்டரி சாலையை ஆய்வு செய்தனர். பின்னர் சாலையை சீரமைக்கவும், தடுப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி தலைவரிடம் உறுதி அளித்தனர்.