கருகிய நெற்பயிர்களை டிராக்டர் மூலம் அழிக்கும் விவசாயிகள்

திருத்துறைப்பூண்டி அருகே தண்ணீர் பற்றாக்குறையால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.விவசாயிகள், கருகிய நெற்பயிர்களை டிராக்டர் மூலம் அழித்து வருகின்றனர்.

Update: 2023-09-15 18:45 GMT

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி அருகே தண்ணீர் பற்றாக்குறையால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.விவசாயிகள், கருகிய நெற்பயிர்களை டிராக்டர் மூலம் அழித்து வருகின்றனர்.

முப்போகம்

காவிரி டெல்டா மாவட்டங்களில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கடைமடை பகுதியாக உள்ளது. இங்கு முழுக்க முழுக்க விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, சரியாக பருவ மழை பெய்து கர்நாடகாவில் இருந்து உரிய தண்ணீர் வழங்கினால் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்படும்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கர்நாடகா தமிழகத்திற்கு தர வேண்டிய உரிய தண்ணீரை வழங்காததாலும், பருவமழை பொய்த்ததாலும் முப்போகம் சாகுபடி செய்த விவசாயிகள் தற்போது ஒருபோகம் சாகுபடி கூட செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தண்ணீர் பற்றாக்குறை

இந்த ஆண்டு மேட்டூர் அணை கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் குறுவை சாகுபடி பணியில் உற்சாகமாக ஈடுபட்டனர். காவிரி டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

குறுவை நெற்பயிர்கள் வளர்ந்து வந்த நிலையில், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பெய்யாததால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்கவில்லை. இதன் காரணமாக குறுவை சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

கருகும் நெற்பயிர்கள்

இதனால் கடைமடை மாவட்டங்களான திருவாரூர், நாகை பகுதியில் பல்வேறு கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்ட நிலையில்தண்ணீர் இன்றி குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. கருகி வரும் நெற்பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் பல்வேறு சிரமங்கள் அடைந்து வருகின்றனர்.

திருத்துறைப்பூண்டி அருகே வேலூர் கிராமத்தில் 300 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதியில் தண்ணீர் இல்லாததால் நெற்பயிர்கள் கருகி வருகின்றன.

டிராக்டர் மூலம் நெற்பயிர்கள் அழிப்பு

பயிர்களை காப்பாற்ற முடியாததால் விரக்தி அடைந்த விவசாயிகள், 70 நாட்கள் வளர்ந்த நெற்பயிர்களை டிராக்டரை கொண்டு அழித்து வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், விவசாயக் கடன், நகைக் கடன் என பல்வேறு கடன்களை பெற்று குறுவை சாகுபடி மேற்கொண்டோம் பயிர்கள் நன்கு வளர்ந்து வந்த நிலையில் தண்ணீர் பற்றாக்குறையால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. நெற்பயிர்கள் அனைத்தும் கருகி வீணாகிவிட்டது.

நிவாரணம் வழங்க வேண்டும்

தண்ணீர் இன்றி கருகிய குறுவை பயிர்களை வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து வடகிழக்கு பருவமழை ஒத்துழைத்தால் சம்பா சாகுபடி செய்யலாம் என திட்டமிட்டுள்ளோம் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்