இலவசமாக மரக்கன்றுகள் பெற விவசாயிகள் பதிவு செய்யலாம்
பசுமை போர்வை திட்டத்தின் கீழ் இலவசமாக மரக்கன்றுகள் பெற விவசாயிகள் பதிவு செய்யலாம் என வேலூர் வேளாண்மை இணை இயக்குனர் ஸ்டீபன் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பசுமை போர்வை திட்டத்தின் கீழ் இலவசமாக மரக்கன்றுகள் பெற விவசாயிகள் பதிவு செய்யலாம் என வேலூர் வேளாண்மை இணை இயக்குனர் ஸ்டீபன் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பசுமை போர்வை இயக்கம்
தமிழ்நாட்டின் பசுமை வனப்பரப்பு மொத்த பரப்பில் கிட்டதட்ட 24 சதவீதம் உள்ளது. தேசிய வனக்கொள்கையின்படி பசுமை வனப்பரப்பு 33 சதவீதம் வரை இருக்க வேண்டும். எனவே தமிழகத்தில் பசுமை வனப்பரப்பை அடுத்த 10 ஆண்டுகளில் 33 சதவீதத்திற்கு உயர்த்துவதற்காக தமிழக அரசு தமிழ்நாடு பண்ணை நிலங்களில் நீடித்த பசுமை போர்வை இயக்கம் என்ற திட்டத்தை கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் தேக்கு, புங்கை, மலைவேம்பு, செம்மரம், பூவரசு உள்ளிட்ட 27 வகையான மரக்கன்றுகள் வனத்துறை நாற்றங்கால்களில் உற்பத்தி செய்து வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் வினியோகம் செய்யப்பட உள்ளன.
அதற்கான மரக்கன்றுகள் எதிர்வரும் வடக்கிழக்கு பருவ மழை காலத்தின் போது வினியோகம் செய்வதற்காக தற்போது வளர்க்கப்பட்டு வருகிறது.
இலவசமாக மரக்கன்றுகள்
வேலூர் மாவட்ட விவசாயிகள் வரப்பு ஓரங்களில் நடவு செய்வதாக இருந்தால் 50 மரக்கன்றுகளும், வயல் முழுவதும் நடவு செய்வதாக இருந்தால் 160 மரக்கன்றுகளும் இலவசமாக வழங்கப்படும். மரக்கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள் வேளாண்மை உழவர் நலத்துறையின் உழவன் செயலி மூலம் தங்களது சர்வே எண் மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.
பதிவு செய்யப்பட்ட வயலை தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் ஆய்வு செய்து உரிய அனுமதி வழங்குவார். பின்னர் தங்களுக்கு தேவைப்படும் மரக்கன்றுகளை வனவியல் விரிவாக்க மைய நாற்றங்காலிலிருந்து பெற்று நடவு செய்து கொள்ளலாம். நன்றாக பராமரித்து வளர்க்கப்படும் மரக்கன்றுகளுக்கு 2-ம் ஆண்டில் இருந்து பராமரிப்பு தொகையாக மரக்கன்று ஒன்றிற்கு ரூ.7 வீதம் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
2.65 லட்சம் இலக்கு
இந்த ஆண்டு வேலூர் மாவட்டத்திற்கு வட்டாரம் வாரியாக வேலூருக்கு 22 ஆயிரம், கணியம்பாடிக்கு 32 ஆயிரம், அணைக்கட்டு, குடியாத்தத்தம், கே.வி.குப்பத்துக்கு தலா 49 ஆயிரம், காட்பாடிக்கு 34 ஆயிரம் மற்றும் பேரணாம்பட்டுக்கு 30 ஆயிரம் மரக்கன்றுகள் என மொத்தம் 2,65,000 மரக்கன்றுகள் வினியோகம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் வினியோகம் செய்யப்பட உள்ளது. எனவே மரக்கன்றுகள் வளர்க்க ஆர்வமாக உள்ள விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டு இலவசமாக மரக்கன்றுகள் பெற்று பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.