விவசாயிகள் கோடை உழவு செய்து பயன்பெறலாம்
காரீப் பருவ பயிர் சாகுபடியில் பயிர் வளர்ச்சிக்கு விவசாயிகள் கோடை உழவு செய்து பயன்பெறலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அரக்குமார் கூறி உள்ளார்.
காரீப் பருவ பயிர் சாகுபடியில் பயிர் வளர்ச்சிக்கு விவசாயிகள் கோடை உழவு செய்து பயன்பெறலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அரக்குமார் கூறி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காரீப் பருவம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் காரீப் பருவமாகிய ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் சிறுதானியங்கள் 22 ஆயிரத்து 239 ஏக்கரிலும், பயறுவகைப் பயிர்கள் 17 ஆயிரத்து 297 ஏக்கரிலும், எண்ணெய் வித்து பயிர்கள் 98 ஆயிரத்து 842 ஏக்கரிலும் பயிரிடப்படுகிறது. இதில் சிறுதானியப் பயரில் சாமை மட்டுமே 14 ஆயிரத்து 826 ஏக்கரில் ஜமுனாமரத்தூர் வட்டாரத்தில் பயிரிடப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பங்குனி, சித்திரை பட்டங்களில் பெய்யும் கோடை மழையை பயன்படுத்தி கோடை உழவு செய்வது மிகவும் இன்றியமையாததாகும்.
பூமி வெப்ப மண்டலமாக இருப்பதால் கோடையில் மேல் மண் அதிக வெப்பமடைகிறது. இந்த வெப்பம் கீழ் பகுதிக்கு செல்லும் போது நிலத்தடி நீர் ஆவியாகி வெளியேறிவிடும். மேல் மண்ணை உழவு செய்து புழுதிப்படலம் அமைத்து விட்டால் விண்வெளிக்கும் வேர் ஆழ் மண்டத்திற்கும் தொடர்பு அறுந்துவிடும். இதனால் நிலத்தில் உள்ள ஈரம் ஆவியாக விடாமல் புழுதிப் படலம் தடுத்துவிடும்.
கோடை மழை
கோடை மழையின் ஈரப்பதத்தைப் பயன்படுத்தி நிலத்தை நன்கு உழவு செய்வதால், மேல் மண் துகள்களாகி நிலத்தில் நீர் இறங்கும் திறன் அதிகரிக்கும். மண்ணில் நல்ல காற்றோட்டம் கிடைப்பதனால் நுண்ணுயிர்களின் செயல்பாடு அதிகமாகி மண்வளம் பெருகும்.
வயலில் உள்ள கோரை போன்ற களைகள் மண்ணில் மேற்பரப்புக்கு கொண்டு வரப்பட்டு சூரிய வெப்பத்தில் நன்கு காய்ந்து கட்டுப்படுத்தப்படுகிறது.
நிலத்தின் அடியில் உள்ள கூண்டு புழுக்கள் மற்றும் தீமை செய்யும் பூச்சிகள், பயிர்களில் வேர் அழுகல் நோயினை ஏற்படுத்தும் பூஞ்சாணங்களின் வித்துக்கள் வெளிக் கொண்டு வரப்பட்டு அழிக்கப்படுகிறது. மக்காச்சோளத்தை தாக்கும் அமெரிக்கன் படைப்புழு கோடை உழவு செய்வதினால் பெருமளவு கட்டுப்படுத்தப்படுகிறது.
கோடை உழவு
குறிப்பாக ஜமுனாமரத்தூர் வட்டார மலைப் பகுதிகளில் உள்ள நிலங்கள் சரிவாக உள்ளதால் கோடையில் பெய்யும் மழைநீர் விரைவாக வழிந்தோடி வீணாகிவிடும்.
சரிவான நிலங்களில் கோடை உழவு செய்வதால் மழைநீர் வீணாகாமல் மண்ணுக்குள் சேமித்து வைக்கப்படுவதால் காரீப் பருவ சாமைப் பயிர் சாகுபடிக்கு பெருமளவு நீர் தேவையினை பூர்த்தி செய்து பயிரின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
எனவே விவசாயிகள் கோடை உழவு செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.