குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு

பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் ஆதார் இணைப்பை கட்டாயமாக்குவதை கண்டித்து குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.

Update: 2022-11-24 19:00 GMT

பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் ஆதார் இணைப்பை கட்டாயமாக்குவதை கண்டித்து குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமா தலைமை தாங்கினார். தாசில்தார்கள் வெங்கடேஸ்வரன், பூங்கொடி, கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் அக்சயபிரியா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப்பகழக கிளை மேலாளர் இளங்கோவன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வெளிநடப்பு

கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் மத்திய அரசு பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தில் குறைந்தபட்ச ஆதரவு உதவித்தொகை பெறுவதற்கு ஆதார் இணைப்பு கட்டாயமாக்குவதை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.இதனை தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், மின் இணைப்பு வழங்கிய தமிழக முதல்-அமைச்சருக்கும், கூடுதல் விலை கொடுத்து நெல் வாங்கும் கேரளா மற்றும் சட்டீஸ்கர் முதல்-அமைச்சர்களை பாராட்டி விவசாயிகள், அலுவலர்கள் அனைவருக்கும் பழங்களை வழங்கினர்.

மின் இணைப்பு

தொடர்ந்து 2023-24 ஆண்டின் நிதி நிலை அறிக்கை கூட்டத்திற்கு முன்பாக தாமதமில்லாமல் மின்இணைப்பை வழங்கவேண்டும். கும்பகோணம் மாநகராட்சி பகுதியிலுள்ள அனைத்து வாய்க்கால்களையும் பொதுபணித்துறை திரும்ப பெற்று, தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.

ஆறுகளில் மணல் திருடுவதை தடுக்க வேண்டும், குளங்களின் நீர் வரும் மற்றும் வெளியேறும் பாதைகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர்.இதைத்தொடர்ந்து கும்பகோணம் அருகே உள்ள உடையாளூர், காங்கேயன்பேட்டை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு குடிமனை பட்டா வழங்க வலியுறுத்தி வருகிற 29-ந் தேதி அனைத்து அரசு ஆவணங்களையும் திரும்ப ஒப்படைக்கவுள்ளதாக கூறி கோஷமிட்டபடி கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்