பருத்திக்கு கூடுதல் விலை கேட்டு விவசாயிகள் சாலை மறியல்

துறையூரில் பருத்திக்கு கூடுதல் விலை கேட்டு விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-01-31 19:00 GMT

துறையூரில் பருத்திக்கு கூடுதல் விலை கேட்டு விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பருத்தி விவசாயம்

துறையூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் பருத்தி விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் துறையூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி விற்பனை செய்வதற்காக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் முன்பதிவு செய்து டோக்கன் பெற்று இருந்தனர்.

இதற்கிடையில் கடந்த வாரத்தைவிட இந்த வாரம் பருத்தி விலை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. அதாவது ரூ.78 நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், இதை கண்டித்து திருச்சி-துறையூர் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

அணிவகுத்து நின்ற பஸ்கள்

இந்த போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இதன் காரணமாக திருச்சியில் இருந்து துறையூர் வரும் பஸ்களும், துறையூரில் இருந்து திருச்சி செல்லும் பஸ்களும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்றதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவல் அறிந்த துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்