கால்நடை ஆஸ்பத்திரியை விவசாயிகள் முற்றுகை

பணகுடி கால்நடை ஆஸ்பத்திரியை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

Update: 2022-06-21 19:21 GMT

பணகுடி:

பணகுடி பேரூராட்சி பகுதிகளில் கால்நடை வளர்ப்போர் அதிகமானோர் உள்ளனர். பல்வேறு நோய் தாக்குதலுக்கு உட்படும் கால்நடைகளை விவசாயிகள், பணகுடி கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வந்தனர். தற்போது இந்த ஆஸ்பத்திரிக்கு உரிய மருத்துவர் மற்றும் மருத்துவ வசதிகள் இல்லாத நிலையில் விவசாயிகள் அவதிப்பட்டனர்.

சங்கனாபுரம் ஆஸ்பத்திரியில் பணியாற்றும் மருத்துவர், பணகுடியில் பொறுப்பு மருத்துவராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிரந்தர மருத்துவர் நியமனம் செய்யப்படாத காரணத்தால் கால்நடைகளுக்கு தகுந்த சிகிச்சை பெறமுடியாமலும், கால்நடை மருந்துகள் இல்லாததாலும் விவசாயிகள் இழப்புகளை சந்திக்கின்றனர். இந்தநிலையில் கால்நடை வளர்க்கும் விவசாயிகள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி திடீரென நேற்று கால்நடை ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்ததும் பணகுடி போலீசார் விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைத்து நிரத்தர கால்நடை மருத்துவரை நியமிக்ககவும், கால்நடை மருந்துகள் கிடைக்கவும் ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்