ஆனத்தூரில் பழுதாகி 2 மாதமாகியும் சீரமைக்கப்படாத மின்மாற்றி பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் கவலை
ஆனத்தூரில் பழுதாகி 2 மாதமாகியும் மின்மாற்றி சீரமைக்கப்படவில்லை. இதனால் பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
திருவெண்ணெய்நல்லூர்,
திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஆனத்தூர் கிராமத்தில் மெயின் ரோடு பகுதியில் 200 கே.வி.ஏ. மின் திறன் கொண்ட மின் மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றி மூலம் 20-க்கும் மேற்பட்ட விவசாய பம்பு செட்டுகளுக்கும், மேலும் யாதவர் வீதி, வாணியர் வீதி, யாதவர் வீதி மெயின் ரோடு ஆகிய பகுதிகளுக்கும் மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த மின்மாற்றி கடந்த 2 மாதத்துக்கு முன்பு திடீரென பழுதானது. இது பற்றி தகவல் அறிந்ததும் மின்சார வாரிய ஊழியர்கள் நேரில் வந்து பார்வையிட்டனர். அவர்கள், மின்மாற்றியில் பழுதை சரிசெய்யவில்லை. மாறாக அருகில் உள்ள மற்றொரு மின்மாற்றியில் இணைப்பை கொடுத்து மின்வினியோகம் செய்யப்பட்டது. இதனால் மின்பற்றாக்கு குறை ஏற்பட்டு வருகிறது. பொதுமக்கள் மின்விளக்கு மின்விசிறி வீட்டு உபயோகப் பொருட்களை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டு மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர். விவசாய பம்பு செட்டுகளிலும் மின்மோட்டார்களை இயக்க முடியவில்லை. இதனால் அங்கு சாகுபடி செய்துள்ள பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே பழுதான மின்மாற்றியை உடனடியாக சீரமைத்து சீரான மின்சாரம் வினியோகம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.