தேயிலை செடிகள் கருகியதால் விவசாயிகள் கவலை

கோத்தகிரியில் கடும் உறைபனியால் தேயிலை செடிகள் கருகின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

Update: 2023-01-12 18:45 GMT

கோத்தகிரி

கோத்தகிரியில் கடும் உறைபனியால் தேயிலை செடிகள் கருகின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

உறைபனி

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. மேலும் பனிமூட்டம் மற்றும் போதிய சூரிய வெளிச்சம் இல்லாததால் தேயிலை செடிகளில் கொப்புள நோய் தாக்கி வந்தது. இருப்பினும் தேயிலை விளைச்சல் போதுமானதாக இருந்தது. மேலும் மழை தொடர்ந்து பெய்து வந்ததால் பனிப்பொழிவின் தாக்கம் காணப்படவில்லை.

இந்நிலையில் கடந்த வாரம் முழுவதும் நீர்பனிப்பொழிவு இருந்து வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடும் உறை பனி கொட்டித்தீர்த்தது.

கவலை

இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள விவசாயிகளின் தேயிலை தோட்டங்களில் இருந்த செடிகள் கருகின. மேலும் இந்த உறைபனி காரணமாக விவசாய பயிர்கள் அனைத்தும் கருகி வருகின்றன. இதன் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க விவசாயிகள் ஸ்பிரிங்ளர் மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகிறார்கள்.

ஆனால் தேயிலை செடிகள் இந்த உறைபனி காரணமாக கருகி வருகிறது. குறிப்பாக மிளிதேன், கேர்கம்பை, கீழ்கோத்தகிரி, ஒன்னட்டி, பனிப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள தேயிலை செடிகள் கருகி உள்ளன. இதனால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.

இழப்பீடு வழங்க வேண்டும்

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

இந்த ஆண்டு பனிக்காலம் தாமதமாக தொடங்கியுள்ள நிலையில் உறைபனியின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. பகலில் வெயில் அடித்தாலும், இரவில் உறைபனி இருப்பதால் பயிர்கள் கருகி விடுகிறது. தேயிலை கொழுந்துகள் கருகி உள்ளதால், அதில் இருந்து பச்சை தேயிலை பறிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம்.

இனி மழை பெய்து பசுமை திரும்பி செடிகளில் கொழுந்து விட்டால் மட்டுமே பச்சை தேயிலையை பறிக்க முடியும். இதற்கு 4 மாதங்கள் வரை ஆகும். அதுவரை என்ன செய்வது என்பது தெரியவில்லை. எனவே பனியால் கருகிய பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்