மழைநீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம்

சீர்காழியில் தொடர் மழையால் விளைநிலங்களில் தண்ணீர் புகுந்தது. இந்த மழை நீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மானிய விலையில் வேளாண் இடுபொருட்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-11-05 18:45 GMT

சீர்காழி:

சீர்காழியில் தொடர் மழையால் விளைநிலங்களில் தண்ணீர் புகுந்தது. இந்த மழை நீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மானிய விலையில் வேளாண் இடுபொருட்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மழைநீரை வடிய வைக்கும் பணி

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலான மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழையால் வைத்தீஸ்வரன் கோவில், அட்டைகுளம், எடக்குடி வடபாதி, விழக்காடு, மருவத்தூர், கீழவெளி, சாந்தபுத்தூர், பொட்டைவெளி, திட்டை, தில்லைவிடங்கன், செம்மங்குடி, கடவாசல், வடகால், எடமணல், அகனி, கொண்டல், வள்ளுவக்குடி, காரைமேடு திருப்புங்கூர், கன்னியாகுடி உள்ளிட்ட பகுதிகளில் நடவு செய்யப்பட்ட சம்பா நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கின. மேலும் மழைநீர் விளைநிலங்களில் புகுந்தது. இதனால் பயிர்கள் சேதமடைந்தன. தற்போது விளைநிலங்களில் புகுந்த மழை நீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இதேபோல் திருமுல்லைவாசல் ஊராட்சிக்குட்பட்ட திருமுல்லைவாசல், வழுதலைக்குடி, ராதாநல்லூர், வருஷபத்து உள்ளிட்ட பகுதிகளில் நடவு செய்யப்பட்ட சம்பா நெற்பயிர்கள், நேரடி நெல் விதைப்பு பயிர்களில் கடல் நீர் உட்புகுந்ததால் சம்பா நெற்பயிர்கள் மற்றும் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வயலில் உள்ள உப்பு நீர் மற்றும் மழை நீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மானிய விலையில் வேளாண் இடுபொருட்கள்

இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், சீர்காழி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விடிய விடிய கொட்டி தீர்த்த 22 சென்டிமீட்டர் கனமழையால் தாழ்வான பகுதியில் நடவு செய்யப்பட்ட சம்பா நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன. இதேபோல் கடற்கரை கிராமங்களில் கடல் நீர் புகுந்ததால் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது விவசாயிகள் குடும்பம் குடும்பமாக மழை நீரை வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு மானிய விலையில் உரம், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களை வழங்க வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்