உடலில் பட்டை போட்டு 2-வது நாளாக விவசாயிகள் போராட்டம்

உடலில் பட்டை போட்டு 2-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

Update: 2023-07-29 21:48 GMT

மலைக்கோட்டை:

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2-வது நாளாக நேற்று விவசாயிகள் நெற்றி மற்றும் உடலில் திருநீற்று பட்டை போட்டுக்கொண்டு அரை நிர்வாணத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும், மத்திய, மாநில அரசுகள் விளை பொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலையை கொடுக்காமல் விவசாயிகளை வஞ்சித்து வருகிறது. ஒரு கிலோ நெல்லுக்கு ரூ.54 மற்றும் ஒரு டன் கரும்புக்கு ரூ.8,100 வழங்க வேண்டும். விவசாயிகள் வாங்கிய வங்கி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் நேற்று காலை நிருபர்களிடம் அய்யாக்கண்ணு கூறுகையில், நேற்று முன்தினம் ராமேசுவரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மந்திரி அமித்ஷாவும், அண்ணாமலையும் விவசாயிகளுக்கு அள்ளிக்கொடுப்பதாக பேசியுள்ளார்கள். ஆனால் விவசாயிகளுக்கு எதுவுமே தரவில்லை. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி காவிரியில் தமிழகத்திற்கு உண்டான தண்ணீர் திறப்பதற்கு கூட நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழக விவசாயிகளுக்கு தமிழக அரசு இலவச மின்சாரம் கொடுப்பதாக கூறினாலும் கூட, விளை பொருட்களுக்கு லாபகரமான விலையை கொடுப்பதில்லை. மோடி நெல்லுக்கு கூடுதல் விலை தருகிறேன் என்றார். இதுவரை தரவில்லை. கரும்பு டன்னுக்கு ரூ.8,500 தருகிறேன் என்றார்கள். அதுவும் தரவில்லை. தேர்தல் வந்தால் காசு கொடுத்து வாக்கை வாங்கிக் கொள்வதால் விவசாயிகள் பற்றி கவலைப்படவில்லை, என்று கூறினார். போராட்டத்தில் வக்கீல் முத்துக்கிருஷ்ணன், மாநில துணை தலைவர் மேகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்