மண் லாரிகளை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம்

பழனி அருகே, மண் லாரிகளை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-31 16:29 GMT

பழனி அருகே ஆயக்குடி பகுதியில் உள்ள தோட்டங்களில் மண் அள்ளி லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் ஆயக்குடி பகுதியில் வரையறை இன்றி மண் அள்ளுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வந்தனர். குறிப்பாக ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மண் அள்ளுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். இந்நிலையில் நேற்று சட்டப்பாறை பகுதியில் இருந்து மண் அள்ளி வந்த லாரிகளை ஆயக்குடி கொய்யா மார்க்கெட் பகுதியில் வைத்து விவசாயிகள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த ஆயக்குடி போலீசார், வருவாய்த்துறையினர் அங்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விவசாயிகள் கூறுகையில், மண் அள்ளி வரும் லாரிகள் சட்டப்பாறை-ஆயக்குடி சாலையில் அதிவேகத்தில் செல்வதால் கொய்யா பறித்து வரும் விவசாயிகள் பாதிப்படைகின்றனர். சாலையும் சேதமடைந்து வருகிறது என்றனர். அதற்கு, மண் லாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்