பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகளுக்கு முறையாக இழப்பீடு வழங்கப்படவில்லை
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டில் மழையால் பாதிப்படைந்ததில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகளுக்கு முறையாக இழப்பீடு வழங்கப்படவில்லை என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குற்றம் சாட்டினர்.
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினர்.
கூட்டத்தில் இந்திய விவசாயிகள் சங்க மாநில பொதுசெயலாளர் தனபதி பேசுகையில், '' புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை சரியாக பெய்யவில்லை. இதனால் பல இடங்களில் ஏரி, குளங்கள் நிரம்பாமல் உள்ளது. மழையை நம்பி விவசாயிகள் சம்பா நெல் சாகுபடி செய்துள்ளனர்.
பாசனத்திற்குரிய தண்ணீர் வசதியை ஏற்படுத்த வேண்டும். கடந்த ஆண்டில் மழையினால் பாதிப்பு ஏற்பட்ட போது விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தில் முறையாக நிவாரணம் கிடைக்கவில்லை. இத்திட்டத்தில் இழப்பீடு வழங்கப்பட்டதை மறு ஆய்வு செய்ய வேண்டும். மாவட்டத்தில் மழை பெய்யாததற்கு காரணம் தைல மரங்கள் தான். தைல மரங்களை அகற்ற வேண்டும். வேளாண்மை இடு பொருட்களுக்கு மானியம் வழங்க வேண்டும்'' என்றார்.
இயற்கை விவசாயம்
விவசாய சங்கத்தை சேர்ந்த மிசா மாரிமுத்து பேசுகையில், ''விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் இல்லாமல் கூட்டம் நடத்த வேண்டாம். அரசு துறைகளில் மாவட்ட தலைமை அதிகாரிகளை கூட்டத்தில் கண்டு தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் என எண்ணி வருகின்றனர். எனவே கலெக்டர் இருக்கும் போது இந்த கூட்டத்தை நடத்த வேண்டும். இல்லையெனில் கூட்டம் நடத்த தேவையில்லை. (அவர் இவ்வாறு பேசுகிற நேரத்தில் பணியின் காரணமாக கலெக்டர் கூட்டத்திற்கு வராமல் இருந்தார். கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திற்கு பிறகு கலெக்டர் வந்தார்.) விவசாயிகளை பாதுகாக்கிற வகையில் உணர்வோடு கூட்டம் நடத்த வேண்டும். காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும். விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். இயற்கை விவசாயத்திற்கும், இயற்கை உரம் தயாரிக்கவும் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்'' என்றார்.
தடுப்பணை
ஏரி, ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விசுவநாதன் பேசுகையில், ''காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தில் திருச்சி முதல் புதுக்கோட்டை மாவட்டம் வரை தெற்கு வெள்ளாறு வரையிலான விவசாயிகள் காவிரி நீர் கண்டிப்பாக கிடைக்கும் என காத்திருக்கின்றனர். இத்திட்டப்பணிகளை துரிதப்படுத்தி நிறைவேற்ற வேண்டும். வெள்ளுணியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும்.
முந்திரி விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு முந்திரிக்கன்று மற்றும் பராமரிப்பு மானியத்துடன் கிடைக்க செய்ய வேண்டும். முந்திரி விவசாயிகளையும் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க வேண்டும்'' என்றார்.
கல்லணை கால்வாய் பாசனத்தார் விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்கத்தின் தலைவர் ரமேஷ் பேசுகையில், ''தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் யூரியா உரம் வாங்கும் போது பாட்டிலில் அடைக்கப்பட்ட ரசாயன உரத்தை வாங்க வேண்டுமென நிர்பந்தம் செய்வதை தடுக்க வேண்டும். வேளாண்மை துறை மூலம் கதிர் அறுவடை எந்திரம் குறைவாக இருப்பதால் எல்லா விவசாயிகளும் பயன்பெற முடியவில்லை. எனவே கூடுதலாக அறுவடை எந்திரங்களை வாங்கி வைக்க வேண்டும்'' என்றார்.
துணிப்பை
இதேபோல விவசாயிகள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக பேசினர். கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பதில் அளித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். கூட்டத்தில் விழிப்புணர்வு துணிப்பை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, வேளாண் இணை இயக்குனர் பெரியசாமி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவிரி-வைகை-குண்டாறு) ரம்யாதேவி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.