வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் விவசாயிகள் பருத்தி சாகுபடி

கொள்ளிடம் ஆற்றுப்படுகை பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் விவசாயிகள் சாகுபடி செய்தது தொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-04-13 18:45 GMT

கொள்ளிடம்:

கொள்ளிடம் ஆற்றுப்படுகை பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் விவசாயிகள் சாகுபடி செய்தது தொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆற்றுப்படுகை

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதியில் அளக்குடி ஊராட்சியைச் சேர்ந்த வெள்ளமணல் கிராமம் அமைந்துள்ளது. இங்கு சுமார் 100-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள சுமார் 20-க்கும் மேற்பட்ட ஏக்கர்களில் தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்து அவர்களின் வாழ்வாதாரத்தை காத்து வருகின்றனர். மேலும், அந்த இடத்திற்கு பல ஆண்டுகளாக வரி செலுத்தியும் வந்துள்ளனர். காலப்போக்கில் அந்த நிலத்திற்கு வரி வசூல் செய்வதை அரசு நிறுத்தி விட்டது.

பருத்தி செடிகளை அழித்தனர்

இதனால் அப்பகுதி வனத்துறை கட்டுப்பாட்டிற்கு வந்தது. இதனால் வனத்துறையினர் அப்பகுதிக்கு வந்து அந்த நிலங்கள் வனத்துறைக்கு சொந்தமானது என்று கூறி பயிர் சாகுபடி செய்வதை தடுத்து வருவதாக கூறப்படுகிறது.மேலும் அவர்கள் மீது வனத்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இப்படி அப்பகுதியில் உள்ள 15-க்கும் மேற்பட்டவர்கள் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தநிலையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் வேலி வைத்து சாகுபடி செய்யப்பட்டிருந்த பருத்தி பயிரை வனத்துறையினர் அழித்தனர்.

5 பேர் மீது வழக்குப்பதிவு

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி சுடர்மனி கூறுகையில், வெள்ளமணல் கிராமத்தில் காலம் காலமாக பல வகையான பயிர்களை நாங்கள் பயிரிட்டு வருகிறோம். கடந்த 5 ஆண்டு காலமாக வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வெள்ளமனல் கிராமத்துக்கு அடிக்கடி வந்து வனத்துறைக்கு சொந்தமான இடம் என்று கூறி பயிர் செய்வதை தடுத்தும் துன்புறுத்தியும் வருகின்றனர்.

தற்போது இப்பகுதியை சேர்ந்த 5 பேர் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனவே காலம் காலமாக பயிர் செய்து வந்த நிலங்களை மீண்டும் எங்களுக்கு விவசாயம் செய்வதற்கு வழங்க வேண்டும் இதுகுறித்து கிராம மக்கள் சார்பில் முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்