காய்ந்த நெற்பயிர்களுடன் விவசாயிகள் முற்றுகை

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தை காய்ந்த நெற்பயிர்களுடன் விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

Update: 2022-12-16 18:45 GMT

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தை காய்ந்த நெற்பயிர்களுடன் விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

விவசாயிகள் முற்றுகை

ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் பல பகுதிகளில் தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் தங்களுக்கு தண்ணீர் வழங்க கோரியும், பயிர்களுக்கு இழப்பீடு வழங்க கோரியும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று ராமநாதபுரத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த விவசாயிகள் காய்ந்த நெற்பயிர்களுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்ட ஒன்றுபட்ட பூர்வீக வைகைப்பாசன விவசாயிகள் கூட்டமைப்பு குழுவின் சார்பில் மாவட்ட செயலாளர் மலைச்சாமி தலைமையில் ஏராளமான விவசாயிகள் கதறி அழுதபடி காய்ந்த நெற்பயிர்களுடன் முற்றுகையிட்டு அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் மாவட்டத்தில் வடக்கும் தெற்கும் காய்ந்து பயிர்கள் கருகிவிட்டன. வைகை பாசனம் உள்ள பகுதிகளுக்கும் தண்ணீர் முழுமையாக போகாமல் கடலில் கலந்து வீணாகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர், அபிராமம் பகுதிகளுக்கு வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் வராததாலும் போதிய அளவு மழை பெய்யாததாலும் தண்ணீரின்றி பயிர்கள் கருகி வருகின்றன. ராமநாதபுரம் மாவட்டம் புலவர் வேலாங்குடி கண்மாயிலிருந்து அபிராமம் பெரிய கண்மாய் வரை 17 கண்மாய்களுக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடவேண்டும். அப்போதுதான் நெற்பயிரை காப்பாற்ற முடியும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இழப்பீடு வழங்க கோரிக்கை

இதேபோல, தமிழக வைகை பாசன விவசாய சங்க தலைவர் பாக்கியநாதன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் காய்ந்து கருகிய நெற்பயிர்களுடன் வந்து மனு அளித்தனர். அந்த மனுவில், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், கமுதி, கடலாடி தாலுகா பகுதிகளில் நேரடி விதைப்பு மூலம் நெல் பயிரிட்டுள்ளோம். ஆனால், மழை இல்லாமலும், கடைமடை வரை கண்மாய்களுக்கு தண்ணீர் வந்து சேராததாலும் இந்த ஆண்டு அனைத்து பயிர்களும் வாடி கருகிவிட்டன. எனவே, சிறப்பு குழு அமைத்து கிராமங்கள் தோறும் ஆய்வு செய்து இயற்கை பேரிடர் பாதித்த பகுதி என அறிவித்து பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் 100 சதவீதம் இழப்பீடு பெற்றுத்தர வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இதேபோல, முதுகுளத்தூர் தாலுகா பகுதியை சேர்ந்த விவசாயிகளும் மனு அளித்தனர். ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் காய்ந்த பயிர்களுடன் விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்