மகளுடன் விவசாயி சாலை மறியல்

வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதில் தாமதம் செய்ததாக கூறி மகளுடன் விவசாயி சாலை மறியலில் ஈடுபட்டார்.

Update: 2023-07-16 13:34 GMT

வந்தவாசி

வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதில் தாமதம் செய்ததாக கூறி மகளுடன் விவசாயி சாலை மறியலில் ஈடுபட்டார்.

வயிற்று வலி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே வெண்குன்றம் கிராமத்தை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 40), விவசாயி. இவரது 12 வயது மகளுக்கு நேற்று  கடும் வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் தியாகராஜன் மகளை அழைத்துக்கொண்டு இரவு 11 மணியளவில் வந்தவாசி அரசு பொது மருத்துவமனைக்கு சென்றார்.

அங்கு பணியில் இருந்த டாக்டர், வேறு ஒருவருக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்ததாக தெரிகிறது. இதனால் வலியுடன் போராடிக் கொண்டிருந்த மகளை கண்ட அவர் கோபத்தில் சத்தம் போட்டு டாக்டரை கூப்பிட்டு சிகிச்சை அளிக்க கேட்டுள்ளார்.

ஆனால் சுமார் 1 மணி நேரம் கழிந்த நிலையில் டாக்டர், மற்ற நோயாளிகளுக்கு சிகிச்சையை முடித்து விட்டு தனது அறைக்குள் செல்ல முயன்றுள்ளார்.

சாலை மறியல்

இதைக்கண்ட தியாகராஜன், தனது மகளுக்கு சிகிச்சை அளித்துவிட்டு செல்லும்படி கேட்டுள்ளார். அதற்கு டாக்டர், உங்கள் மகளுக்கு செவிலியர்கள் சிகிச்சை அளிப்பார்கள் என கூறியதாக தெரிகிறது.

இதனால் டாக்டரிடம் தியாகராஜன் வாக்குவாதம் செய்து உறவினர்களுடன் மருத்துவமனை எதிரே வந்தவாசி -மேல்மருவத்தூர் நெடுஞ்சாலையில் நள்ளிரவு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார்.

இதுகுறித்து தகவலறிந்த வந்தவாசி தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாபு. தட்சிணாமூர்த்தி மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் சிறுமிக்கு அளிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்