நில ஆவணத்தில் வேறு பெயர் இருப்பதாக கூறிஉயர்மின் கோபுரத்தில் ஏறிவிவசாயி தற்கொலை மிரட்டல்

நில ஆவணத்தில் வேறு பெயர் இருப்பதாக கூறி உயர்மின் கோபுரத்தில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் இண்டூர் அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2023-04-18 19:13 GMT

பாப்பாரப்பட்டி

விவசாய நிலம்

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே சோம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குள்ளையன். இவருக்கு முனியம்மாள் என்ற மனைவியும், சின்னசாமி (வயது 48), முனியப்பன் (45) என்ற இரு மகன்கள், ஜம்பேரி (50) என்ற மகளும் உள்ளனர். இதில் முனியம்மாள் தனது பெயரில் இருந்த விவசாய நிலத்தின் ஒரு பகுதியை மகன் முனியப்பனுக்கு கொடுத்தாராம்.

இதற்கிடையே அந்த நிலத்தின் வருவாய் ஆவணங்களில் வேறுநபர்கள் பெயர் இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதையடுத்து முனியப்பன், மல்லாபுரம் அருகே உள்ள உயர்மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

பேச்சுவார்த்தை

தகவல் அறிந்த இண்டூர் போலீசார், பென்னாகரம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். நல்லம்பள்ளி தாசில்தார் ஆறுமுகம், துணை போலீஸ் சூப்பிரண்டு இமயவரம்பன் ஆகியோர் உயர்மின்கோபுரத்தில் ஏறிய முனியப்பனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் சமாதானம் அடைந்த முனியப்பன் கீழே இறங்கி வந்தார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்