சொத்து தகராறில் கத்தியால் குத்தி விவசாயி கொலை

சொத்து தகராறில் கத்தியால் குத்தி விவசாயி கொலை

Update: 2022-07-24 19:58 GMT

மதுக்கூர்

மதுக்கூர் அருகே சொத்து தகராறில் கத்தியால் குத்தி விவசாயி கொலை செய்யப்பட்டாா். இது தொடர்பாக அவரது அண்ணனை போலீசார் தேடி வருகிறார்கள்.

விவசாயி

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள கீழக்குறிச்சி கிராமம் காமராஜர் வீதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருடைய மகன்கள் கரிகாலன், நரசிம்மன்(வயது47), இளையராஜா(44). கரிகாலன் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். நரசிம்மன் மன்னார்குடியில் குடும்பத்துடன் உள்ளாா்.

3-வது மகன் இளையராஜா, பன்னீர்செல்வம் தங்கி இருக்கும் வீட்டின் மாடியில் வசித்து விவசாய பணிகளை செய்து வந்தார். பன்னீர்செல்வம் தனது மகன்களுக்கு சொத்தை பிரித்துக் கொடுத்துவிட்டார். இந்தநிலையில் இளையராஜா சொத்தில் தனது பங்கையும் தனது அண்ணன் நரசிம்மன் பயன்படுத்தும் பம்பு செட்டையும் ஒரு பெண்ணுக்கு எழுதி கொடுத்து விட்டார்.

விருந்து

இதனால் இளையராஜாவுக்கும், நரசிம்மனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இளையராஜா தனது குலதெய்வத்துக்கு கிடாவெட்டி விருந்து வைத்துள்ளார். விருந்து முடிந்த பின் இளையராஜா மாலை 5 மணிக்கு வீட்டுக்கு வந்தார். இதன் பின் 6 மணிக்கு வீட்டை விட்டு சென்றவர் இரவு 12 மணிக்கு வீட்டுக்கு வந்தார்.

இந்தநிலையில் இளையராஜாவின் அண்ணன் நரசிம்மன் நேற்று அதிகாலை 5 மணிக்கு தனது உறவினர் பாண்டியன் என்பவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றும் அதனால் வீட்டில் சென்று அவரை பார்க்கவும் என கூறினார்.

வலைவீச்சு

இதனால் பாண்டியன் பன்னீர்செல்வம் வீட்டுக்கு சென்றார்.

அப்போது மீண்டும் பாண்டியனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நரசிம்மன் தனது தம்பி இளையராஜாவை கத்தியால் குத்தி விட்டதாக கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சிஅடைந்த பன்னீர்செல்வம் மற்றும் பாண்டியன் வீட்டின் மாடிக்கு சென்று பார்த்தனர். அப்போது விட்டின் மாடியில் இளையராஜா உடலில் காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த மதுக்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இளையராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய நரசிம்மனை போலீசார் ேதடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்