திருப்பத்தூர் கோர்ட்டில் விவசாயி உள்ளிருப்பு போராட்டம்

திருப்பத்தூர் கோர்ட்டில் விவசாயி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-10-18 17:22 GMT

திருப்பத்தூர் கோர்ட்டில் விவசாயி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உள்ளிருப்பு போராட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த தேவராஜூலு ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் பரந்தாமன் (வயது 56), விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாயம் நிலம் அதே பகுதியில் உள்ளது.

இந்த நிலத்தை திருப்பத்தூரை சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஒப்பந்தம் குறிப்பிட்ட கால அளவை கடந்ததால் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என திருப்பத்தூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த மாதம் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு காரணமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை எனக்கூறப்படுகிறது.

இந்தநிலையில், நேற்று காலை கோர்ட்டுக்கு வந்த பரந்தாமன் தான் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமா ? அல்லது தள்ளுபடி செய்யப்படுமா ? என்பதை உடனே தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி கோர்ட்டு வளாகத்தில் அமர்ந்து திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

பரபரப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி மற்றும் போலீசார் கோர்ட்டுக்கு சென்று பரந்தாமனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இரவு 7 மணி அளவில் பரந்தாமன் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனக்கூறி கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதையடுத்து, பரந்தாமன் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றார்.

இந்த சம்பவம் திருப்பத்தூர் கோர்ட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்