தனியார் பள்ளி பஸ் மோதி விவசாயி பலி
வாணியம்பாடி அருகே தனியார் பள்ளி பஸ் மோதி விவசாயி பலியானார்.
ஆம்பூரை அடுத்த நாய்க்கனேரி மலைப்பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 48), விவசாயி. இவர் நேற்று மாலை வெள்ளைகுட்டை கிராமத்திலிருந்து வாணியம்பாடி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். வாணியம்பாடி - செட்டியப்பனூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி பஸ் அதிவேகமாக சென்று கொத்தகோட்டை கூட்டுரோடு பகுதியில் எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட சிவக்குமார் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். தகவல் அறிந்ததும் வாணியம்பாடி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து பஸ் டிரைவர் தமிழ்ச்செல்வனை (56) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.