சிவகாசி,
சாத்தூர் அருகே உள்ள காட்டுப்புதுதெருவை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 58). இவர் சடையம்பட்டி பகுதியில் விவசாயம் செய்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று தோட்டத்திற்கு தேவையான உரமூடைகளை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று இறக்கி வைத்து விட்டு சாத்தூர்- கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி, ஜெய்சங்கர் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து ஜெய்சங்கர் மனைவி இசக்கியம்மாள் சாத்தூர் தாலுகா போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் விபத்துக்கு காரணமான லாரியை ஓட்டி வந்த சிவகிரியை சேர்ந்த ஜூலியட்ராஜா என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.