மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து சேற்றில் சிக்கிய விவசாயி பலி
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து சேற்றில் சிக்கிய விவசாயி பலியானார்.
அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் பகுதியை சார்ந்தவர் புஷ்பராஜ் (வயது 58), விவசாயி. இவருக்கு சொந்தமான நிலம் தக்கோலத்தை அடுத்த வட்டுமுடையார் குப்பம் பகுதியில் உள்ளது. நேற்று முன்தினம் புஷ்பராஜ் நிலத்திற்கு சென்று விட்டு நள்ளிரவு மோட்டர் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். தக்கோலம் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நீரேற்று நிலையம் பகுதியில் வந்தபோது புஷ்பராஜ் நிலை தடுமாறி அங்குள்ள விவசாய நிலத்தில் விழுந்தார். அப்போது புஷ்பராஜின் தலை சேற்றில் சிக்கி மயங்கிய நிலையில் கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் புஷ்பராஜை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டார்.
இது குறித்து தக்கோலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.