காட்டுயானை தாக்கி விவசாயி படுகாயம்
கூடலூர் அருகே காட்டுயானை தாக்கி விவசாயி படுகாயம் அடைந்தார். மேலும் வீட்டையும் சேதப்படுத்தி அட்டகாசம் செய்தது.
கூடலூர்
கூடலூர் அருகே காட்டுயானை தாக்கி விவசாயி படுகாயம் அடைந்தார். மேலும் வீட்டையும் சேதப்படுத்தி அட்டகாசம் செய்தது.
காட்டுயானை முற்றுகை
கூடலூர் தாலுகா பகுதியில் காட்டு யானைகள் அதிகளவில் ஊருக்குள் வருகிறது. இதனால் தினமும் பாதிப்பு ஏற்படுகிறது. தேவர்சோலை பேரூராட்சி பாடந்தொரை அருகே உளியமாசோலை கிராமத்துக்குள் ஒரு காட்டுயானை நேற்று இரவு புகுந்தது. தொடர்ந்து அப்பகுதி மக்களின் வீடுகளை முற்றுகையிட்டது. இதனால் அச்சத்துடன் அப்பகுதி மக்கள் வீடுகளுக்குள் பதுங்கினர்.
இந்த சமயத்தில் அதே பகுதியை சேர்ந்த விவசாயி ரவிச்சந்திரன்(வயது 55) என்பவரது வீட்டின் அருகே காட்டுயானை நின்று இருந்தது. சத்தம் கேட்டு அவர் வீட்டை விட்டு வெளியே வர முயன்றார். அப்போது இருளில் நின்றிருந்த காட்டு யானை திடீரென ஓடி வந்து ரவிச்சந்திரனை தாக்கியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். தொடர்ந்து வீட்டுக்குள் தப்பி ஓட முயன்றார். ஆனால் காட்டு யானை அவரை வீட்டின் நுழைவு வாயிலில் நின்று தாக்கியது. இதனால் வீடும் சேதம் அடைந்தது.
பலத்த காயம்
இதைக்கண்ட ரவிச்சந்திரன் குடும்பத்தினர் கூச்சலிட்டனர். இதனால் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து காட்டு யானை ரவிச்சந்திரனை விட்டு அங்கிருந்து சென்றது. பின்னர் பலத்த காயமடைந்த அவரை பொதுமக்கள் பாதுகாப்பாக காப்பாற்றி ஆஸ்பத்திரி கொண்டு செல்வதற்காக வாடகை வாகன ஓட்டிகளை தொலைபேசியில் அழைத்தனர். காட்டு யானைகள் நடமாட்டம் இருப்பதால் யாரும் வரவில்லை.
இதைத்தொடர்ந்து ஆம்புலன்ஸ் வேன் வரவழைக்கப்பட்டது. பின்னர் படுகாயம் அடைந்த ரவிச்சந்திரன் கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரது உடற்பாகங்களை எக்ஸ்ரே எடுக்க டாக்டர் இல்லாததால் மேல்சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கண்காணிப்பு தீவிரம்
காட்டுயானையின் தொடர் அட்டகாசத்தால், கிராம மக்கள் இடையே பீதி நிலவுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது காட்டு யானை ஊருக்குள் வராமல் தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து கண்காணிப்பு பணியை வனத்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.
--------------------------