நெல்லை தாலுகா அலுவலகம் முன் குடும்பத்துடன் விவசாயி உண்ணாவிரதம்

தனிப்பட்டா வழங்க அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக கூறி நெல்லை தாலுகா அலுவலகம் முன்பு குடும்பத்துடன் விவசாயி உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-01-27 22:47 GMT

நெல்லை அருகே உள்ள சுத்தமல்லியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 40). இவரது அண்ணன் மாரிவேல். விவசாயிகளான இவர்கள் நேற்று தங்களது குடும்பத்தினருடன் வந்து நெல்லை தாலுகா அலுவலக நுழைவுவாயில் எதிர்ப்புறம் திடீரென தரையில் அமர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் சந்திப்பு போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது மாரிமுத்து கூறியதாவது:-

எங்களது பூர்வீக சொத்து சுத்தமல்லியில் உள்ளது. இதனை எங்களது குடும்பத்தினரும், பெரியப்பா குடும்பத்தினரும் சரிபாதியாக பங்கிட்டு கொண்டோம். இதற்காக அந்த சொத்திற்கான கூட்டுப்பட்டாவில் இருந்து தனிப்பட்டா கேட்டு விண்ணப்பம் செய்தோம். மாதக்கணக்காகியும் எங்களுக்கு தனிப்பட்டா வழங்கவில்லை.

இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் கேட்டபோதும், அவர்கள் ஆவணங்கள் சரியில்லை என்று கூறி அலைக்கழிப்பு செய்தனர். மேலும் எங்களிடம் தனிப்பட்டா வழங்க ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டனர். எனவே, உடனடியாக எங்களுக்கு தனிப்பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் ஆய்வாளர் லட்சுமண பாண்டியன், உதவி போலீஸ் கமிஷனர் விஜயகுமார், இன்ஸ்பெக்டர் ஞானராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரியம்மாள், செல்லத்துரை ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உதவி போலீஸ் கமிஷனர் விஜயகுமார், 'நீங்கள் உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு பேச்சுவார்த்தைக்கு வாருங்கள்' என்று கூறி அவர்களை ஒரு ஆட்டோவில், உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார்.

தனிப்பட்டா வழங்க அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக கூறி விவசாயி குடும்பத்தோடு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்