ரூ.2 லட்சம் நகை-பணம் திருட்டுபோனதால் அதிர்ச்சியில் விவசாயி சாவு; பண்ருட்டி அருகே சோகம்
பண்ருட்டி அருகே ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணம் திருட்டுபோனதால் அதிர்ச்சியில் விவசாயி பரிதாபமாக இறந்தார்.
பண்ருட்டி,
கதவு பூட்டு உடைப்பு
பண்ருட்டி அருகே ஏ.ஆண்டிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 69) விவசாயி. இவரது மனைவி ஆனந்தி. இந்த நிலையில் இவர்கள் இருவரும் கடந்த 9-ந்தேதி காலை வீட்டை பூட்டிவிட்டு கடலூர் திருவந்திபுரம் கோவிலுக்கு சென்றனர். பின்னர் பிற்பகல் 2.30 மணிக்கு அவர்கள் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்றுபார்த்தனர். அப்போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திடீர் மாரடைப்பு
இந்த நிலையில் வீட்டில் இருந்த ராமலிங்கத்திற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.