போலீசார் தாக்கியதில் விவசாயி சாவு

போலீசார் தாக்கியதில் விவசாயி உயிரிழந்தார்.

Update: 2022-12-08 20:30 GMT

மஞ்சள் நீராட்டு விழா

தஞ்சை மாவட்டம் சோழபுரம் அருகே உள்ள அணைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் கடந்த 24-ந் தேதி அரியலூர் மாவட்டம் காசாங்கோட்டை கிராமத்தில் உள்ள தனது அக்காள் மகள் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு உறவினர்களை அழைத்துக் கொண்டு மேள தாளங்களுடன் சீர்வரிசை எடுத்துச் சென்றுள்ளார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த வல்லவன் (வயது 41), ரவி (43) சுமதி, (43) அருண்குமார் (30), ராஜதுரை (31) ஆகியோர் புருஷோத்தமனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து புருஷோத்தமன் விக்கிரமங்கலம் போலீஸ் நிலையத்தில் தன்னை சாதியை குறிப்பிட்டு இழிவாக பேசியதாக புகார் அளித்துள்ளார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வல்லவன், ரவி, சுமதி, அருண்குமார், ராஜதுரை ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

விவசாயி மீது தாக்குதல்

கடந்த 25-ந் தேதி அருண்குமாரை கைது செய்ய விக்கிரமங்கலம் போலீசார் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அருண்குமார் வீட்டில் இல்லாததால் அதே கிராமத்தில் உள்ள அருண்குமாரின் மாமனாரும், விவசாயியுமான செம்புலிங்கம் (52) வீட்டிற்கு சென்று விசாரித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் போலீசார் செம்புலிங்கம், அவரது மனைவி சுதா, மகன் மணிகண்டன் ஆகியோரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த செம்புலிங்கம் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த செம்புலிங்கத்தின் உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டதையடுத்து டாக்டர்கள் அளித்த தகவலின்பேரில் போலீசார் அவரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர். அந்த வாக்கு மூலத்தில் செம்புலிங்கம் தனது வீட்டிற்கு தலைமைகாவலர் பழனிவேல் தலைமையில் போலீசார் வந்து மருமகன் அருண்குமார் குறித்து விசாரணை செய்ததாகவும், அவர் வீட்டில் இல்லை என்று கூறியபிறகும், தன்னையும், தனது மனைவி சுதா மற்றும் மகன் மணிகண்டன் ஆகியோரை போலீசார் தாக்கியதில் காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.

சிகிச்சை பலனின்றி சாவு

இதற்கிடையே செம்புலிங்கத்தின் உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் அரியலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் வயிற்றில் ரத்தப்போக்கு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக கடந்த 7-ந் தேதி திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செம்புலிங்கம் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த அவருடைய உறவினர்கள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினர் செம்புலிங்கம் சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனை முன்பு திரண்டனர். பின்னர் செம்புலிங்கத்தை தாக்கிய போலீசாரை கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், அவர்கள் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

இழப்பீடு வழங்க கோரிக்கை

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருச்சி தெற்கு துணை போலீஸ் கமிஷனர் ஸ்ரீதேவி தலைமையில், உதவி போலீஸ் கமிஷனர்கள் சுந்தரமூர்த்தி, கென்னடி மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என்று 100-க்கும் மேற்பட்டோர் அங்கு பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர். மேலும் திருச்சி வருவாய் கோட்டாட்சியர் தவசெல்வம் மற்றும் அரியலூர் போலீசாரும் போராட்டம் நடத்த முயன்றவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, போலீசார் தாக்கியதால் தான் செம்புலிங்கம் பலியானதாகவும், போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவருடைய குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இந்த சம்பவம் குறித்து அளிக்கப்படும் புகார் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்குவது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

8 போலீசார் மீது வழக்கு

இதைத்தொடர்ந்து, செம்புலிங்கம் இறந்த சம்பவம் குறித்து, அவருடைய உறவினர் அளித்த புகாரின் பேரில் செம்புலிங்கத்தை தாக்கிய 8 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து செம்புலிங்கத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து செம்புலிங்கத்தின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் செம்புலிங்கத்தை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினர் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பூங்கோதையிடம் தக்க நடவடிக்கை எடுக்குமாறு பெண்கள் கீழே விழுந்து கும்பிட்டு கேட்டுக் கொண்டனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ் கான் அப்துல்லாவிடம் மனு அளித்தனர். மேலும், காசாங்கோட்டை கிராமத்தில் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்