விபத்தில் விவசாயி சாவு: நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
பெரியகுளம் அருகே விபத்தில் விவசாயி இறந்ததற்கான நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது
பெரியகுளம் அருகே உள்ள எ.புதுப்பட்டியை சேர்ந்தவர் குமார் (வயது 50). விவசாயி. கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் 25-ந்தேதி இவர், பெரியகுளம்-மதுரை சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற அரசு பஸ் குமார் மீது மோதியது. இதில் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து குமாரின் மனைவி பரமேஸ்வரி, மகன் காசிமாயன் ஆகியோர் விபத்து நஷ்ட ஈடு வழங்க கோரி பெரியகுளம் கூடுதல் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த அப்போதைய நீதிபதி பாதிக்கப்பட்டவர்களுக்கு கடந்த ஆண்டு நஷ்ட ஈடாக ரூ.10 லட்சத்து 50 ஆயிரத்து 444 வழங்க அரசு போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவு பிறப்பித்தார். ஆனால் நஷ்ட ஈடு இதுவரை வழங்கப்படவில்லை. இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் வழக்கில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிங்கராஜ் அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து கோர்ட்டு அமினா ரமேஷ் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் வக்கீல்கள் பெரியகுளம் பஸ் நிலையத்திற்கு சென்று அங்கு நின்ற அரசு பஸ்சை ஜப்தி செய்து கோர்ட்டுக்கு கொண்டு சென்றனர்.