மகனை கத்தியால் குத்திக்கொன்ற விவசாயி கைது

பட்டுக்கோட்டை அருகே சொத்தை பிரித்து கேட்ட மகனை அவரது தந்தை கத்தியால் குத்தி கொலை செய்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-07-03 21:05 GMT
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள துவரங்குறிச்சி மேட்டுக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் சந்திரகுமார்(வயது58) விவசாயி. இவருடைய மனைவி நிர்மலா. இவர்களின் மகன் மார்க் டிக்சன்(27). இவர் தனது தாயுடன் தஞ்சையில் வசித்து வந்தாா். நேற்று முன்தினம் மாலை தஞ்சையிலிருந்து துவரங்குறிச்சிக்கு வந்த மார்க்டிக்சன் தனது தந்தை சந்திரகுமாரிடம் சொத்துக்களை பிரித்து கொடுக்கும்படி கேட்டார். இதனால் தந்தை- மகன் இடையே வாக்குவாதம் முற்றியது.

கைது

இதில் ஆத்திரம் அடைந்த சந்திரகுமார் கத்தியை எடுத்து மகன் மார்க்டிக்சனை குத்தி மண்வெட்டியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த மார்க்டிக்சனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மார்க்டிக்சன் நேற்று காலை இறந்தார். இது குறித்து பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் தாய் நிர்மலா புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





Tags:    

மேலும் செய்திகள்