ஈரோடு மாவட்டத்தில் 2,854 பேருக்கு விவசாய மின் இணைப்பு
ஈரோடு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 854 விவசாயிகளுக்கு விவசாய மின்சார இணைப்பு வழங்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 854 விவசாயிகளுக்கு விவசாய மின்சார இணைப்பு வழங்கப்படுகிறது.
விவசாய மின் இணைப்பு
தமிழகத்தின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்றது முதல் விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள் பலவற்றை நிறைவேற்றி வருகிறார். அதன்படி மின் கட்டணம் இல்லாமல் விவசாயிகளுக்கு மின்சார இணைப்பு வழங்கும் வகையில் ஏற்கனவே மாநிலம் முழுவதும் 1 லட்சம் விவசாயிகளுக்கு மின்சார இணைப்பு வழங்கப்பட்டது. இதில் ஈரோடு மின் பகிர்மான வட்டத்தில் 1,187 விவசாயிகளும், கோபி மின்பகிர்மான வட்டத்தில் 2,105 விவசாயிகளும் மின்சார இணைப்பு பெற்று உள்ளனர்.
கடந்த அக்டோபர் மாதம் கரூரில் நடந்த அரசு விழாவில் மேலும் 50 ஆயிரம் விவசாயிகளின் நிலங்களுக்கு மின் கட்டணம் இல்லாத மின்சார இணைப்புகள் வழங்கி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் ஈரோடு மின் பகிர்மான வட்டத்துக்கு உள்பட்ட 1,143 பேருக்கும், கோபி மின் பகிர்மான வட்டத்தில் 1,711 பேருக்கும் என மாவட்டத்தில் மொத்தம் 2,854 பேருக்கு மின் இணைப்பு வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த திட்டத்தில் மின் இணைப்புகள் வழங்கும் பணி தொடங்கி உள்ளது.
பத்மாவதி
இவ்வாறு இணைப்பு பெற்ற சலங்கபாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி கா.பாலசுப்பிரமணி என்பவருடைய மனைவி பத்மாவதி கூறியதாவது:-
எனக்கு 2 ஏக்கர் நிலம் உள்ளது. மழை வந்தால் மட்டுமே விவசாயம் என்ற நிலையில் தரிசாக கிடந்தது. இந்த நிலத்தில் தண்ணீர் இருந்தால் நெல் உள்ளிட்ட விளைபொருட்கள் நடவு செய்யலாம் என்று நினைத்து, கடந்த 2012-ம் ஆண்டு ஆழ்குழாய் கிணற்றுக்கான மோட்டாருக்கு மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்து இருந்தேன். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்றதும் 1 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று அறிவித்தார். அதில் எனக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தேன். ஆனால் பல ஆண்டுகளாக மின் இணைப்பு கிடைக்காமல் காத்திருந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இணைப்பு வழங்கப்பட்டதால் அப்போது எனக்கு கிடைக்கவில்லை. இந்தநிலையில் மேலும் 50 ஆயிரம் பேருக்கு மின் இணைப்பு வழங்கப்படும் திட்டத்தில், முன்னுரிமை அடிப்படையில் எனக்கு 10 குதிரைத்திறன் கொண்ட ஆழ்குழாய் பம்பு இயக்கும் வகையில் மின்சார இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. இப்போது நிலத்துக்கு நல்ல தண்ணீர் கிடைக்கிறது. எனவே விரைவில் நெல் மற்றும் பல்வேறு பயிர்கள் நடவு செய்ய இருக்கிறேன். கட்டணமில்லாத மின்சாரம் என்பதால், விவசாயத்தில் வரும் வருவாய் எனது குடும்ப பொருளாதாரத்தை உயர்த்தும்.
இவ்வாறு அவர் கூறினார். இவருக்கு கரூரில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து மின் இணைப்பு உத்தரவு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
செந்தில்குமார்
பெருந்தலையூர் பகுதியை சேர்ந்த நாராயணன் என்பவருடைய மகன் நா.செந்தில்குமார் கூறியதாவது:-
எனக்கு 1 ஏக்கர் 33 சென்ட் விவசாய நிலம் உள்ளது. வேளாண்மை செய்வதற்காக விவசாய நிலத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து நெல் பயிரிட்டு இருக்கிறேன். ஆழ்குழாய் கிணற்றுக்கு பொருத்தப்பட்டு உள்ள மின்சார பம்புக்கு இலவச இணைப்பு கிடைக்காததால் எனது வருவாயில் பெரும்பங்கு மின்சார செலவுக்கே போய் வந்தது. நான் இலவச மின்சாரம் கேட்டு கடந்த 2004-ம் ஆண்டிலேயே விண்ணப்பித்து இருந்தேன். பல ஆண்டுகளாக காத்து இருந்து இனிமேல் மின்சார இணைப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்த நிலையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 கட்டங்களாக 1½ லட்சம் விவசாய மின் இணைப்புகளை வழங்கி உள்ளார். இதில் எனக்கு 7.5 குதிரைத்திறன் மின்சார பம்பு இயக்க இலவச மின்சார இணைப்பு வழங்கப்பட்டது. இதனால் இனிமேல் மின்சாரத்துக்கான செலவு, எனது வருவாய் பட்டியலில் வந்து விடும். குடும்ப பொருளாதாரம் உயர்வதால் குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.