விவசாய பணிகள் தீவிரம்

வைகை தண்ணீர் வருகை எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2022-09-04 18:10 GMT

ராமநாதபுரம், 

வைகை தண்ணீர் வருகை எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விவசாய பணி

ராமநாதபுரம் மாவட்டத்தில் வானம் பார்த்த விவசாயம் அதிகம் மேற்கொள்ளப்படுகிறது. கண்மாய்கள் உள்ள பகுதிகளில்தான் கண்மாய் நீரினை பயன்படுத்தி விவசாயம் செய்யப்படுகிறது. இதன்காரணமாக வைகை தண்ணீரையும், வடகிழக்கு பருவ மழையையும் நம்பித்தான் இந்த மாவட்ட விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொள்வது வழக்கம்.

வழக்கமாக வைகை தண்ணீரும், வடகிழக்கு பருவமழையும் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் கைகொடுத்து வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் வழக்கத் திற்கு மாறாக வைகை அணையில் இருந்து உபரி நீர் மற்றும் மாவட்ட கணக்கில் இருந்து நீரும் திறந்துவிடப்பட்டு பெரிய கண்மாய் முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

தண்ணீர்

பருவமழை சமயத்தில்தான் பெரிய கண்மாய் சில சமயங்களில் நிரம்புவது வழக்கம். இந்த ஆண்டு பருவ மழைக்கு முன்னதாகவே கண்மாய் நிரம்பி சுற்றி உள்ள கண்மாய்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. குறிப்பாக சக்கரக்கோட்டை கண்மாய், களரி கண்மாய் உள்ளிட்ட மாவட்டத்தின் இதர பெரிய கண்மாய்களுக்கு தண்ணீர் அதிகஅளவில் திறந்துவிடப்பட்டு உள்ளது.

மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த மழை மற்றும் வைகை தண்ணீர் வரத்து காரணமாக நெல்விவசாயம் நன்றாக கைகொடுத்த நிலையில் அதற்கு அடுத்தாற்போல பருத்தி மற்றும் மிளகாய் விவசாயமும் விவசாயிகளின் நம்பிக்கையை காப்பாற்றியது.

நம்பிக்கை

தற்போது மிளகாய், பருத்தி விவசாயம் ஏறத்தாழ முடிவடைந்த நிலையில் விவசாயிகள் அடுத்தபடியாக மீண்டும் நெல் விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர். இவர்களின் நம்பிக்கைக்கு ஏற்பவைகை தண்ணீர் வந்து நீர்நிலைகள் நிரம்பி வருவதாலும், பருவமழைக்கு முந்தைய மழையும் பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் தங்களின் நிலங்களில் டிராக்டர்கள் மூலம் உழுது நெல் விவசாயத்திற்கு தயாராகி வருகின்றனர்.

பல கிராமங்களில் உழுது அதற்கடுத்தாற்போல விதைப்பு பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். அதிகாலையிலேயே வயல்வெளிகளுக்கு சென்று விவசாய பணிகளை ஆர்வமுடன் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்யும் என கணிக்கப்பட்டு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்