விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் பண்ணை கருவிகள்
விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் பண்ணை கருவிகள் வழங்கப்படுவதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வினித் மேக்டலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு பசுமை போர்வை திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு வழங்க 13 ஆயிரம் மகோகனி செடிகள் வேளாண் விரிவாக்க மைய சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பயிர் செய்ய, 1 ஏக்கருக்கு 64 செடிகளும், தனி பயிராக பயிர் செய்ய, 1 ஏக்கருக்கு 200 செடிகளும் தேவைப்படும். அவ்வாறு தேவைபடும் விவசாயிகள் சிட்டா, ஆதார்டு கார்டு, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல், பாஸ் போட் அளவு போட்டோ ஆகிய ஆவணங்களை வேளாண் விரிவாக்க மையத்தில் சமர்ப்பித்து பதிவு செய்து பயன்பெற்றலாம்.
மேலும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட வடுகந்தாங்கல், வேப்பங்கனேரி, முடினாம்பட்டு, சேத்துவண்டை, கவசம்பட்டு பி.கே.புரம், கே.வி.குப்பம், நெட்டேரி, விழுந்தாங்கால் ஆகிய ஊராட்சிகளுக்கு 278 பண்ணை கருவிகள் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. கடப்பாறை, மண்வெட்டி, 2 அரிவாள்கள், சின்ன களைக் கொத்தி, டக்காரி ஆகியவை இந்த பண்ணைக் கருவிகளில் அடங்கும். பண்ணைக் கருவிகள் தேவைப்படும் விவசாயிகள், சிட்டா, ஆதார், வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல், பாஸ்போட் சைஸ் போட்டோ, உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து 50 சதவீத மானியத்துடன் பெற்றுக் கொள்ளலாம். உழவன் செயலி மூலம் பதிவு செய்து, முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.