பிரபல ரவுடி வசூர்ராஜா கைது

வேலூரில் பிரபல ரவுடி வசூர்ராஜா கைது செய்யப்பட்டார். போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது அவரது கை முறிந்தது.

Update: 2023-07-28 17:52 GMT

பிரபல ரவுடி

வேலூர் சத்துவாச்சாரி புதுவசூரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் வசூர்ராஜா (வயது 36). வேலூரில் பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல் உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளது. பலமுறை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி, மதுரை அருகே சுங்கச்சாவடியில் சொகுசு காரில் வந்த ரவுடிக்கும்பல் ரூ.50 கட்டணம் செலுத்த மறுத்து, அங்கிருந்த ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது. அந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ரவுடிகளில் வசூர் ராஜாவும் ஒருவர்.

போலீசார் அவரை கைது செய்து திருச்சி ஜெயிலில் அடைத்தனர். இதையடுத்து பெங்களூரு போலீசார் பல்வேறு வழக்குகள் தொடர்பாக அவரை விசாரணைக்காக காவலில் எடுத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

தலைமறைவு

ஜாமீனில் வெளியே வந்த அவர் தலைமறைவானார். அவர் மீது வேலூர் வடக்கு, தெற்கு, சத்துவாச்சாரி உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில் அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. தொடர்ந்து அவரை கைது செய்ய காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் கோர்ட்டில் ஆஜராகாததால் இது தொடர்பாகவும் அவர் மீது சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார் வசூர்ராஜாவை தீவிரமாக தேடி வந்தனர். எனினும் அவர் போலீசாரிடம் சிக்காமல் இருந்தார்.

பணம் கேட்டு மிரட்டல்

இந்த நிலையில் தலைமறைவாக இருந்தபடியே சத்துவாச்சாரி பகுதியில் பெயிண்ட் கடை நடத்தி வரும் ஓ.எஸ்.பாஷாவிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்போனில் தொடர்பு கொண்டு, தனக்கு, ரூ.3 லட்சம் தர வேண்டும் இல்லையென்றால் உன்னையும், உனது குடும்பத்தினரையும் கொன்று விடுவதாக வசூர்ராஜா மிரட்டினார்.

இதையடுத்து நேற்று முன்தினம் பாஷா மற்றும் அவரது கடையில் வேலை பார்க்கும் சலீம் ஆகியோர் கடைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அவரை காரில் வசூர்ராஜாவும், அவரின் கூட்டாளியான காட்பாடி கார்ணாம்பட்டை சேர்ந்த வெங்கடேசன் (34) என்பவரும் பின் தொடர்ந்து சென்றனர். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் திடீரென பாஷாவையும், சலீமையும் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி உன் கடைக்கு வருவேன். ரூ.5 லட்சத்தை தயார் செய்து வைத்துக் கொள் இல்லையென்றால் கொலை செய்து விடுவேன் என்று கூறினார். மேலும் அவர்களிடமிருந்து ரூ.20 ஆயிரத்தையும் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து பாஷா சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்தார்.

கை முறிவு

தொடர்ந்து தனிப்படை போலீசார் வசூர் ராஜாவை பிடிக்கும் முயற்சியை தீவிரப்படுத்தினர். அவரின் செயல்பாடுகளையும் கண்காணித்து வந்தனர். அதன்படி பெருமுகையில் நேற்று வசூர்ராஜா பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரையும், அவருடன் இருந்த வெங்கடேசனையும் பிடிக்க முயன்றனர். அப்போது தப்பி செல்ல முயன்ற வசூர்ராஜா தவறி கீழே விழுந்தார். அதில் அவரது வலது கையில் அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது. தொடர்ந்து அவரையும், வெங்கடேசனையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்