விழுந்து போனது சிக்னல்... விபத்து ஏற்படும் அபாயம்
நெகமம் நால்ரோடு சந்திப்பில் தானியங்கி சிக்னல் விழுந்து போனது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
நெகமம்
நெகமம் நால்ரோடு சந்திப்பில் தானியங்கி சிக்னல் விழுந்து போனது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
நெகமம் நால்ரோடு
பொள்ளாச்சியில் இருந்து திருப்பூர் செல்லும் வழியில் நெகமம் நால்ரோடு உள்ளது. இதன் மேற்கு பகுதியில் கோவை செல்லவும், கிழக்கு பகுதியில் தாராபுரம் செல்லவும், வடக்கு பகுதியில் பல்லடம், திருப்பூர், ஈரோடு செல்லவும், தெற்கு பகுதியில் பொள்ளாச்சி, வால்பாறை, ஆனைமலை, ஆழியாறு மற்றும் கேரள செல்லவும் சாலை உள்ளது.
இந்த பகுதியில் தென்னை சார்ந்த தொழிற்சாலைகள், விசைத்தறிகள், கோழிப்பண்ணைகள், பிளாஸ்டிக் தொழிற்சாலைகள், மர அறுவை மில்கள், கொப்பரை தேங்காய் உற்பத்தி நிலையங்கள் உள்பட பல்வேறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
போக்குவரத்து நெருக்கடி
இதன் காரணமாக அந்த சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்படுகிறது. மேலும் தேசிய நெடுஞ்சாலை என்பதால் கனரக வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் அந்த சந்திப்பு பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. மேலும் திருப்பூர்-பொள்ளாச்சி மெயின் ரோட்டில் அதிவேகத்தில் வரும் வாகனங்கள் விபத்துகளில் சிக்குகின்றன.
அவதி
இதை தவிர்க்க நெகமம் நால்ரோடு சந்திப்பில் தானியங்கி போக்குவரத்து சிக்னல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. அந்த சிக்னல் அடுத்த சில மாதங்கள் மட்டுமே செயல்பட்டது. அதன்பிறகு மின்சார இணைப்பு திடீரென துண்டிக்கப்பட்டது. இதனால் சிக்னல் செயல்படாமல் இருந்தது.
இதற்கிடையில் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று திடீரென அந்த சிக்னல் மீது மோதியது. இதனால் அந்த சிக்னல் கீழே விழுந்தது. பல மணி நேரம் ஆகியும் அதை யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
மீண்டும் அமைக்க வேண்டும்
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
நெகமம் நால்ரோடு சந்திப்பில் விபத்துகளை தடுக்க தானியங்கி போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டது.
ஆனால் அது தொடர்ந்து முறையாக செயல்படவில்லை. மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் இருந்தது.
தற்போது அந்த சிக்னல் இருந்த கம்பமே சாய்ந்து கிடக்கிறது. அதை அகற்றவோ அல்லது மீண்டும் நடவோ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அந்த வழியாக அதிவேகத்தில் வரும் வாகனங்களை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே அந்த சிக்னலை மீண்டும் அமைத்து, மின்சார வசதி ஏற்படுத்தி கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.