தேங்காய், கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சி; விவசாயிகள் கவலை
வடகாடு சுற்றுவட்டார பகுதிகளில் தேங்காய், கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலைப்பட்டு வருகின்றனர்.
தேங்காய் உற்பத்தி
வடகாடு, மாங்காடு, அனவயல், புள்ளான்விடுதி, நெடுவாசல், கொத்தமங்கலம், கீரமங்கலம், குளமங்கலம், மறமடக்கி, ஆலங்காடு, கீழாத்தூர் உள்ளிட்ட சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் தென்னை மரக்கன்றுகளை சாகுபடி செய்து அதனை பராமரித்தும் வருகின்றனர்.
கஜா புயலுக்கு பின்னர் தற்போது தான் தேங்காய் உற்பத்தி ஓரளவுக்கு அதிகரித்து வரும் நிலையில், அதன் விலை தான் தென்னை விவசாயிகளுக்கு கட்டுபடி ஆகாத நிலையில் இருப்பதாக விவசாயிகள் குறை கூறி வருகின்றனர். இங்கு உற்பத்தி ஆகும் தேங்காய்களை விவசாயிகள் கமிஷன் கடைகளுக்கும், சில்லறை வியாபாரிகளிடமும், தேங்காய் மொத்த வியாபாரிகளிடமும் விற்பனை செய்தும் வருகின்றனர்.
ஏற்றுமதி
இப்பகுதிகளில் வாங்கப்படும் தேங்காய்கள் ஆலங்குடி, புதுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, புதுக்கோட்டை பகுதிகளில் உள்ள வாரச்சந்தை மற்றும் உழவர் சந்தைகளுக்கு வியாபாரிகள் மூலமாக, கொண்டு சென்று விற்பனை நடைபெற்று வருகின்றன. மேலும் தேங்காய் மொத்த வியாபாரிகள் மூலமாக, காங்கேயம், திருச்சி, சென்னை மற்றும் புது டெல்லி போன்ற பெரும் நகர் பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.
விலை வீழ்ச்சி
மேலும் தேங்காய் எண்ணெய் எடுக்க பயன்படும் கொப்பரை தேங்காய் விலையும், வீழ்ச்சி கண்டு தற்போது, கடைகளில் கிலோ ரூ.50 முதல் 60 வரைக்கு மட்டுமே விவசாயிகளிடம் இருந்து வாங்கப்பட்டு வரப்படுகின்றன. இப்பகுதிகளில் அரசு கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் அரசு கொப்பரை தேங்காய் கொள்முதலை ஆண்டு முழுவதும் செய்ய வேண்டும் எனவும், தற்போது ஒரு சில குறிப்பிட்ட மாதங்கள் மட்டுமே அரசு கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. தேங்காய் ஒன்று தற்போது, ரூ.10 முதல் ரூ.11-க்கு மட்டுமே விவசாயிகளிடம் இருந்து வாங்கப்பட்டு வரப்படுகின்றன. மேலும் பொங்கல் பண்டிகை சமயங்களில் கூட தேங்காய் விலை உயர்வு பெற வாய்ப்பு இல்லாமல் குறைந்த விலைகளிலேயே விற்பனை ஆகி வருவதால் தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலைப்பட்டு வருகின்றனர்.