பொய்கை வாரச்சந்தை ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்
குறைந்த தொகைக்கு ஏலம் போனதால் பொய்கை வாரச்சந்தை ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என அணைக்கட்டு ஒன்றியக்குழு கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பாபு வலியுறுத்தினார்.
ரத்து செய்ய வேண்டும்
அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழு தலைவர் சி.பாஸ்கரன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி முன்னிலை வகித்தார். அலுவலக மேலாளர் சதீஷ் வரவேற்று பேசினார். மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் மு.பாபு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
அனைத்து கவுன்சர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது. அப்போது பொய்கை வாரச்சந்தை ரூ.79 லட்சத்து 70 ஆயிரத்துக்கு ஏலம்போனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மு.பாபு குறுக்கிட்டு கடந்த ஆண்டு ரூ.1 கோடிக்கு மேல் ஏலம் போனது. இந்த ஆண்டு 79 லட்சத்திற்கு மட்டுமே ஏலம் போனதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளீர்கள். உடனடியாக இந்த தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என கூறினார்.
நாய் கடிக்கு மருந்து
மேலும் கடந்த 5 ஆண்டுகளாக முத்துக்குமரன் மலையிலிருந்து பீஞ்ச மந்தை வரை தார் சாலை அமைக்கப்படும் என கூறிவந்தனர். அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால் தார் சாலை அமைப்பதற்கு நேற்று சட்டமன்றத்தில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு கவுன்சிலர்கள் நன்றி தெரிவித்தனர்.
அணைக்கட்டு அரசு மருத்துவமனை, பீஞ்ச மந்தை, ஒடுகத்தூர், மராட்டி பாளையம், பள்ளிகொண்டா உள்ளிட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாம்பு கடி, நாய் கடிக்கு மருந்துகள் இருப்பதில்லை. மேலும் டாக்டர்கள் சரிவர பணிக்கு வருவதில்லை என கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர். அதன் பேரில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்திலும் பாம்பு கடிக்கு மருந்துகள் இருப்பு வைக்க மாவட்ட ஊராட்சி குழு தலைவர், மருத்துவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுழற்சி முறையில் டாக்டர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும். ஒன்றிய குழு கூட்டத்தில் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கலந்துகொள்ள வேண்டும் என கவுன்சிலர்கள் கேட்டுக் கொண்டனர். பல்வேறு கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள மயான பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.