மதுரையில் போலி சித்தா டாக்டர் கைது

மதுரையில் மூட்டுவலிக்கு சிகிச்சைக்கு சென்ற போலீஸ்காரர் சாவில் தவறான சிகிச்சை அளித்த போலி சித்தா டாக்டர் கைது செய்யப்பட்டார். 9-ம் வகுப்பு படித்த அவர் சிகிச்சை அளித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

Update: 2023-04-07 19:36 GMT

மதுரையில் மூட்டுவலிக்கு சிகிச்சைக்கு சென்ற போலீஸ்காரர் சாவில் தவறான சிகிச்சை அளித்த போலி சித்தா டாக்டர் கைது செய்யப்பட்டார். 9-ம் வகுப்பு படித்த அவர் சிகிச்சை அளித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

போலீஸ்காரர் சாவு

மதுரை வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது 36), ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி கண்மணி(30) இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ராஜபாண்டி கடந்த சில நாட்களாக மூட்டு வலியால் அவதிப்பட்டார். அதை தொடர்ந்து வில்லாபுரம் வீரபத்திரப்பிள்ளை காம்பவுண்டு பகுதியில் உள்ள தனியார் சித்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிகிச்சை பெறும் போது, ராஜபாண்டிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜபாண்டி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி, அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். அதில் கணவருக்கு தவறான சிகிச்சை அளித்ததால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக குறிப்பிட்டு இருந்தார்.

9-ம் வகுப்பு

அதன் பேரில் அவனியாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் ராஜபாண்டியின் பிரேத பரிசோதனை முடிவின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் போலீஸ்காரருக்கு சிகிச்சை அளித்த சித்தா டாக்டர் சிவசுப்பிரமணி (53) குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் அவரது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு என்பதும், 9-ம் வகுப்பு வரை படித்து இருப்பதும், பிழைப்புக்காக பல்வேறு கூலி தொழில்களை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் திருவள்ளூர், திருத்தணி ஊர்களில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்துள்ளார். அதில் போதிய வருமானம் இல்லாத காரணத்தினால் தலை சுமையாக ஊர், ஊராக சென்று துணி வியாபாரம் செய்துள்ளார்.

சித்த வைத்தியரிடம் வேலை பார்த்தவர்

அப்போது தான் ஒரு சித்த வைத்தியர் அவருக்கு அறிமுகம் ஆனார். அவரிடம் வேலைக்கு சேர்ந்துள்ளார். மேலும் அவர் அளிக்கும் சிகிச்சையை பார்த்து அதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளாக சிகிச்சை அளித்து வந்துள்ளார். இவர் பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் படித்ததாக போலியாக டாக்டர் சான்றிதழ் பெற்றுள்ளார்.

இதுதவிர வேறு ஒருவரின் பெயரில் இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்து அதன் பேரில் கிளினிக் நடத்தி வந்துள்ளார். வேறு யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக சித்த மருத்துவர் எம்.டி. என்று பெயர் பலகையும் வைத்திருந்தும் தெரியவந்தது.

போலி டாக்டர் கைது

இதற்கிடையில் மதுரை மக்கள் நல்வாழ்த்துறை இணை இயக்குனர் மற்றும் சித்தா டாக்டர்கள் அடங்கிய குழுவினர் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவருக்கு சிகிச்சை முறை எதுவும் தெரியாது என்பதும், அவர் வைத்திருந்த அனைத்து சான்றிதழ்களும் போலியானவை என்பதும் தெரியவந்தது. மேலும் பிரேத பரிசோதனை முடிவில் தவறான சிகிச்சையால் தான் போலீஸ்காரர் இறந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து போலி டாக்டர் சிவசுப்பிரமணியை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்