கஞ்சா விற்ற போலி சாது கைது
திருவண்ணாமலையில் கஞ்சா விற்பனை செய்த போலி சாது கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலையில் கஞ்சா விற்பனை செய்த போலி சாது கைது செய்யப்பட்டார்.
ரகசிய தகவல்
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் மர்மநபர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் திருவண்ணாமலை துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் மற்றும் போலீசார் இன்று கிரிவலப் பாதையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது நித்தியானந்தா ஆசிரமம் அருகே கிரிவலப்பாதையில் காவி உடை அணிந்த ஒருவர் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தார்.
அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.
தொடர்ந்து அவரை போலீசார் சோதனை செய்தபோது, அவரிடம் இருந்து சுமார் ஒரு கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
கைது
விசாரணையில் அவர், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா, ஜீவா நகரை சேர்ந்த ஆறுமுகம் (வயது 48) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து ரூ.7 ஆயிரம் மதிப்புடைய கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
இவர் ஆந்திராவில் கஞ்சாவை விலைக்கு வாங்கி வந்து திருவண்ணாமலையில் சாது போர்வையில் பிறருக்கு கூடுதல் விலைக்கு விற்று வந்தததாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் அவரை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து கஞ்சா விற்பனையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலையில் கஞ்சா விற்ற போலி சாது கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.