கொண்டலாம்பட்டி:-
கொண்டலாம்பட்டி அருகே போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
சோதனை
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள பெரிய புத்தூர் பெரியார் நகரை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 55). இவர் எம்.பி.பி.எஸ். மருத்துவம் படிக்காமல் அந்த பகுதியில் கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் பொது மக்களுக்கு ஊசி மருந்துகள் செலுத்தியும், மாத்திரைகள் கொடுத்து மருத்துவம் பார்த்ததாக கூறப்படுகிறது.
இது பற்றி சிறப்பு மருத்துவக்குழுவை சேர்ந்த டாக்டர் கேலன்குமார் மற்றும் பிரகாஷ் ஆகியோருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் கொண்டலாம்பட்டி போலீசாருடன் சேர்ந்து அந்த குறிப்பிட்ட கடைக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கே இளங்கோவன் ஊசி மற்றும் மாத்திரைகள் வைத்துக் கொண்டு வைத்தியம் பார்ப்பது தெரியவந்தது.
போலி டாக்டர் கைது
பின்னர் அவர் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பு பார்க்காமல் வேறு பட்டப்படிப்பு படித்து விட்டு போலி டாக்டராக பணிபுரிந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் போலி டாக்டர் என்பதை உறுதி செய்த கொண்டலாம்பட்டி போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.