திண்டிவனத்தில் 2 பேரிடம் போலி ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து ரூ.80 ஆயிரம் அபேஸ் வாலிபர் கைது

திண்டிவனத்தில் 2 பேரிடம் போலி ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து ரூ.80 ஆயிரத்தை அபேஸ் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-07-12 17:32 GMT

திண்டிவனம்,

திண்டிவனம் போலீசார் திண்டிவனம் நேரு வீதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் அருகே நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்த மனோகரன் மகன் நவீன்(வயது 32) என்பதும், ஏ.டி.எம். மையங்களுக்கு பணம் எடுக்க வந்த கிடங்கல் 2 பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர் நம்பிராஜன் என்பவரிடம் ஏ.டிஎம். எந்திரத்தில் பணம் எடுத்து தர உதவி செய்வதுபோல் நடித்து போலி ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து ரூ.50 ஆயிரத்தையும், திண்டிவனம் டி.வி.நகரை சேர்ந்த சந்தியா என்பவரிடம் போலி ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து ரூ.30 ஆயிரத்தை அபேஸ் செய்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து நவீனை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்த ரூ.30 ஆயிரம் மற்றும் 9 போலி ஏ.டி.எம். கார்டுகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்