மெத்தை தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து
தளி அருகே மெத்தை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.
தேன்கனிக்கோட்டை
தளி அருகே மெத்தை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.
தொழிற்சாலையில் தீ
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள பெல்லூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான மெத்தை தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் நேற்று முன்தினம் தொழிலாளர்கள் வேலை முடிந்து வீடடுக்கு சென்று விட்டனர். நள்ளிரவு திடீரென தீப்பிடித்து கொண்டது.
இந்த தீ மளமளவென பிடித்து உள்ளே இருந்த மெத்தை உள்ளிட்ட பொருட்களில் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதன் காரணமாக அந்த பகுதி புகை மூட்டமாக காணப்பட்டது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் தளி போலீஸ் நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
பொருட்கள் எரிந்து சேதம்
இதனையடுத்து போலீசார் மற்றும் தேன்கனிக்கோட்டை தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தொழிற்சாலையில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர். பல மணி நேரம் போராடி தீயணைப்புபடையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் தொழிற்சாலையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மெத்தைகள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது.
இந்த தீவிபத்து குறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்தது. மெத்தை தொழிற்சாலையில் தீப்பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.