வீட்டில் இருந்தபடியே 'உயிர்வாழ்' சான்றிதழ் சமர்ப்பிக்க வசதி
மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது என நாகை தபால் கோட்ட கண்காணிப்பாளர் (பொறுப்பு) பசுபதி கூறி உள்ளார்.
மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது என நாகை தபால் கோட்ட கண்காணிப்பாளர் (பொறுப்பு) பசுபதி கூறி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உயிர் வாழ் சான்றிதழ்
மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் நேரில் சென்று உயிர் வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க, ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங்களை தவிர்க்க தபால் துறையின் மூலம் வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி தபால் துறையின் கீழ் செயல்படும், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே பயோ மெட்ரிக் முறையை பயன்படுத்தி டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் (ஜீவன் பிரமான்) சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு சேவை கட்டணமாக ரூ.70-ஐ தபால்காரரிடம் செலுத்த வேண்டும். ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார் எண், செல்போன் எண், ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து, கை விரல் ரேகையை பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும்.
பதிவிறக்கம்
டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சேவையை பெற விரும்பும் ஓய்வூதியதாரர்கள் அருகில் உள்ள தபால் நிலையம் அல்லது தங்கள் பகுதி தபால்காரரை தொடர்பு கொள்ள வேண்டும்.
மேலும் www.ccc.cept.in என்ற இணையத்தள முகவரி மூலம் அல்லது postinfo என்ற செயலியை பதிவிறக்கம் செய்து சேவை தொடர்பான கோரிக்கையை பதிவு செய்யலாம். மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் மட்டுமின்றி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்களும், இந்த வசதியை பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே தங்கள் பகுதி தபால்காரரிடம் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.