விவசாயிகளே விளைபொருட்களை விற்பனை செய்யும் வசதி: தமிழகத்தில் `இ-நாம்' செயலி பயன்பாட்டில் உள்ளதா? -அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை தாங்களே விற்பனை செய்து கொள்ளும் இ-நாம் செயலியின் பயன்பாடு குறித்து அரசு தரப்பில் தெரிவிக்கும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-02-06 20:23 GMT


விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை தாங்களே விற்பனை செய்து கொள்ளும் இ-நாம் செயலியின் பயன்பாடு குறித்து அரசு தரப்பில் தெரிவிக்கும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

விலை நிர்ணயம் அவசியம்

மதுரையை சேர்ந்த சுந்தர்ராஜ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

இந்தியாவில் பெரும்பாலானவர்கள் விவசாயத்தை நம்பியே உள்ளனர். தமிழ்நாட்டில் ஏராளமான பயிர்கள் பயிரிடப்படுகின்றன. விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததாலும், பருவநிலையால் பயிர்கள் அழிவதை தடுக்க முடியாததாலும் நஷ்டம் ஏற்பட்டு ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாக உள்ளது. இதனால் இளம் சமுதாயத்தினர் விவசாயத்துறையை விட்டுவிலகும் நிலையும் நிலவுகிறது.

குண்டூசி தயாரிப்பவர்கள் கூட, அதற்கு விலையை நிர்ணயிக்கும் உரிமையை பெற்றுள்ளனர். ஆனால் காய்கறி, பழங்கள் என விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு விலை நிர்ணயிக்க முடியவில்லை. நெல், கரும்புக்கு மட்டும் அரசு விலை நிர்ணயம் செய்கிறது. மற்ற பொருட்களை இடைத்தரகர்களும், வியாபாரிகளும் விலை நிர்ணயம் செய்து, செல்வம் கொழிக்கின்றனர். ஆனால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. பொதுமக்களும் அதிக விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

அரசுக்கு உத்தரவிடுங்கள்

நமது அரசியலமைப்பு சட்டத்தின் 48-வது பிரிவானது, விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை ஒழுங்குபடுத்த அரசு முயற்சிக்க வேண்டும் என்கிறது. அதன்படி தென் தமிழக மக்களால் பயிரிடப்படும் கத்தரிக்காய், வெண்டைக்காய், தக்காளி, வெங்காயம், மிளகாய், கேரட், முட்டை கோஸ், உருளைக்கிழங்கு, முருங்கை போன்ற காய்கறிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை மாநில அரசு நிர்ணயிக்க வேண்டும்.

கேரளாவில் மரவள்ளிக்கிழங்கு, நேந்திரன் வாழைப்பழம், அன்னாசிப்பழம், பாகற்காய், வெள்ளரிக்காய், தக்காளி, வெண்டைக்காய், முட்டைகோஸ், கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், பீட்ரூட், பூண்டு ஆகியவற்றிற்கு அடிப்படை விலை நிர்ணயம் செய்து உள்ளது. அதேபோல கிழங்கு, பூசணி, கத்தரிக்காய், சுரைக்காய், தர்பூசணி ஆகியவற்றிற்கு அடிப்படை விலையை நிர்ணயிக்க முடிவு செய்துள்ளது. எனவே விவசாயிகளின் நலன் கருதி, தென்தமிழகத்தில் விளையும் காய்கறிகள் உள்ளிட்ட விளை பொருட்களுக்கு அடிப்படை விலை நிர்ணயம் செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

தமிழகம் முழுவதும்...

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், காய்கறி விவசாயம் தமிழகம் முழுவதும்தான் நடக்கிறது. தென் மாவட்டத்தை மட்டும் குறிப்பிட்டது ஏன்? தமிழகம் முழுவதும் என்று மனுவில் மாற்றிட வேண்டும் என்றனர்.

பின்னர் ஆஜரான அரசு வக்கீல், அழுகும் பொருட்களுக்கான விலையை மத்திய அரசுதான் நிர்ணயம் செய்யும் என்றார். அதற்கு மனுதாரர் வக்கீல் திருநாவுக்கரசு ஆஜராகி, அரசியலமைப்பு சட்டத்தின்படி விவசாயம் என்பது மாநில அரசின்கீழ்தான் வருகிறது. எனவே அழுகும் விளைபொருட்களுக்கு தமிழக அரசே விலை நிர்ணயம் செய்யலாம் என்றார்.

இதையடுத்து மத்திய அரசு வக்கீல் ஆஜராகி, விவசாய பொருட்களை விற்பனை செய்ய `இ-நாம்' என்ற செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. அதன்மூலம் விவசாயிகளே தங்களின் விளை பொருட்களை விற்பனை செய்யலாம் என்றார்.

பதில் அளியுங்கள்

பின்னர், தமிழ்நாட்டில் `இ-நாம்' செயலி பயன்பாட்டில் உள்ளதா? இந்த செயலியை விவசாயிகள் எந்த அளவுக்கு பயன்படுத்துகின்றனர்? இதை விவசாயிகள் பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளதா? என தமிழக விவசாயத்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் பதில் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்