வாகன ஓட்டிகளுக்கான கண் பரிசோதனை, மருத்துவ முகாம்

வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகன ஓட்டிகளுக்கான கண் பரிசோதனை, மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2023-01-18 11:02 GMT

போக்குவரத்து வார விழா

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு வார விழா கடந்த 11-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு தினமும் பல்வேறு வகைகளில் வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தது.

இந்தநிலையில் விழாவின் இறுதி நாளையொட்டி நேற்று துணை போக்குவரத்து ஆணையர் இளங்கோவன் உத்தரவின் பேரில், வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் (பொறுப்பு) தலைமையில் மோட்டார்வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம் (வேலூர்), ராஜேஷ்கண்ணா (குடியாத்தம்) ஆகியோர் முன்னிலையில் வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கண் பரிசோதனை மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது.

வேலூரை சேர்ந்த தனியார் மருத்துவமனை டாக்டர்கள் தலைமையிலான குழுவினர் இந்த மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டனர்.

கண் பரிசோதனை

அலுவலகத்துக்கு வந்த, வாகன ஓட்டுனர் உரிமத்துக்கு விண்ணப்பித்தவர்கள், புதுப்பித்தவர்கள் உள்ளிட்ட அனைத்து வகை விண்ணப்பதாரர்களுக்கும் கண்பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் அவர்களின் உடல்நலம் குறித்தும் பரிசோதனை செய்யப்பட்டது. மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டன. தொடர்ந்து சிலருக்கு கண் கண்ணாடி அணிய வேண்டும் என்பது குறித்து மேல் சிகிச்சைக்கும் பரிந்துரைக்கப்பட்டது.

இதில் வாகன ஓட்டுனர் பயிற்சியை சேர்ந்த ஊழியர்கள், ஆட்டோ டிரைவர்கள், பள்ளி வாகன டிரைவர்கள், வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர்களுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அவர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்றுவது குறித்து விழிப்புணர்வும், உடல்நலத்தில் அக்கறை கொள்ள வேண்டும் என்று அறிவுரையும் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்